ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

டெஹ்ரான்: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் தப்ரிஸ் நகரில் தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேர் கடந்த 19ம் தேதி பயணித்த ஹெலிகாப்டர், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மலைகளின் மீது விழுந்து நொறுங்கியது.

மோசமான வானிலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. தீவிர தேடுதல் முயற்சிக்குப் பின் அதிபர் ரைசி உள்ளிட்ட 8 பேரின் சடலங்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. அதிபரின் மறைவைத் தொடர்ந்து 5 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஈரான் உச்ச லைவர் ஆயத்துல்லா அலி காமனெயி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பலியான அதிபர் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் கொண்டு செல்லப்பட்ட தப்ரிஸ் நகரில் இருந்து இறுதி ஊர்வலம் நேற்று தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கறுப்பு உடையுடன் குவிந்து அதிபர் ரைசி உள்ளிட்டோருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் குவாம் நகரை அடைந்து அங்கிருந்து நேற்று இரவு தலைநகர் டெஹ்ரானுக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. டெஹ்ரானில் உச்ச தலைவர் காமனெயி முன்னிலையில் இன்று இறுதி ஊர்வலம் நடைபெறும். அப்போது வெளிநாட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர். அதைத் தொடர்ந்து ரைசின் சொந்த ஊரான மஸ்ஸாத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு வியாழக்கிழமை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி ஊர்வலத்தையொட்டி டெஹ்ரானில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* துணை ஜனாபதிபதி தன்கர் செல்கிறார்
மறைந்த அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று அஞ்சலி செலுத்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் ரைசி மறைவைத் தொடர்ந்து நேற்று ஒருநாள் இந்தியாவில் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ஜூன் 28ல் அதிபர் தேர்தல்
அதிபர் ரைசி மறைவைத் தொடர்ந்து, துணை அதிபர் முகமது முக்பர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் ஜூன் 28ல் அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஈரான் உதவி கேட்டும் மறுத்தது அமெரிக்கா
அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையில் உதவுமாறு ஈரான் அமெரிக்காவிடம் உதவி கேட்டது. ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்கா உதவி செய்ய மறுத்து விட்டது. அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் ஆழமாக செல்ல விரும்பவில்லை. ஈரான் எங்களிடம் உதவி கேட்டது.

இதுபோன்ற சமயங்களில் எந்த அரசிற்கும் நாங்கள் உரிய மரியாதை அளிப்போம். ஆனால் சில திட்டமிட்ட செயல்களை பாதிக்கும் என்கிற காரணத்தால் எங்களால் உதவ முடியவில்லை’’ என்றார். ஈரான் மீது அமெரிக்கா விதித்த அமெரிக்காவின் தடையால் தான் பழைய ஹெலிகாப்டர்களை புதுப்பிக்க முடியாமல் இந்த விபத்து நடந்ததாக ஈரானில் ஒருதரப்பினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: