ரஷ்யா- உக்ரைன் டிரோன் யுத்தம்: 90 டிரோன்கள் அழிப்பு

கீவ்,மே 20: உக்ரைன் ஏவிய 60க்கும் மேற்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பதிலுக்கு ரஷ்யாவின் 30 டிரோன்கள்,ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளால் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் பகுதியில் தாக்குதலை ரஷ்யா தொடங்கி உள்ளது. கார்கிவ்வில் ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி நேற்று முன்தினம் முதல் தாக்குதல் நடத்தியது. இதில், ரஷ்யாவின் 30 டிரோன்கள் மற்றும் சில ஏவுகணைகளை வான்வெளி பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஆனால், கார்கிவ் ஆளுநர் கூறுகையில், கார்கிவ் புறநகர் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர் என்று தெரிவித்தார். ரஷ்யாவின் கிராஸ்னோடார்,பெல்கோரோடு மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமீயா தீபகற்பத்தை குறி வைத்து ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. கிராஸ்னோடாரில் உக்ரைனின் 57 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. கிரீமியாவில் உக்ரைனின் 9 ஏவுகணைகள், 3 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. மேலும்,பெல்கோரோடில் உக்ரைனின் டிரோன் தாக்குதலில் ஒரு தேவாலயம் சேதமடைந்தது. எனினும் உயிர் சேதம் எதுவும் இல்லை. அங்கு 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

The post ரஷ்யா- உக்ரைன் டிரோன் யுத்தம்: 90 டிரோன்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: