தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, மே 17: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது வெளியாகியுள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த கல்வி ஆண்டும் ஒவ்வொரு மாணவரும் சிறப்பாக பாடதிட்டங்களை படிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வேண்டும். மேலும், பள்ளி வயதுடைய குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

மேலும், இளைஞர் கலை திருவிழா நடத்தி மாணவர்களின் ஆளுமை திறனை வெளி கொண்டுவர வேண்டும். தற்போது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை துணை தேர்வுக்கு விண்ணப்பித்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி அனைவரையும் தேர்ச்சி பெற செய்து உயர் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் முற்றிலும் பயன்படுத்தாமல் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும். 10, 11 மற்றும் 12 ம்வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் இரண்டாம் பெற்றோர்களாக இருந்து மாணவர்களை வழிநடத்த வேண்டும்.

பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி, அவர்களை தொடர் கல்வி கற்க ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, கோவிந்தன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஹேமலதா, உதவி திட்ட அலுவலர் வடிவேலு, நேர்முக உதவியாளர் வெங்கடேசன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: