1,07,083 வாக்குகள் பெற்ற வித்யாராணி வீரப்பன்

கிருஷ்ணகிரி, ஜூன்6: சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். இவர் பாஜ.,வில் மாநில அளவில் பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்த போதே, நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நீ தான் வேட்பாளராக களம் காண வேண்டும் என சீமான் தெரிவித்தார். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி வீரப்பன் போட்டியிட்டார். தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அவர், மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என பிரசாரம் மேற்கொண்டார்.

தீவிர பிரசாரம் செய்த வித்யாராணி வீரப்பனுக்கு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் 1 லட்சத்து 7ஆயிரத்து 83 வாக்குகள் கிடைத்துள்ளது. குறிப்பாக வன்னியர் சமூக மக்களின் வாக்குகள் வித்யாராணிக்கு அதிகளவில் கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 22,264 வாக்குகளும், பர்கூரில் 19,745, வேப்பனப்பள்ளியில் 19,636, ஓசூரில் 18,611, ஊத்தங்கரையில் 16,172, தளியில் 9,430 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 28 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 3 மடங்கு கூடுதலாக பெற்றுள்ளது. இதற்கு வீரப்பனின் மகள் என்கிற அடையாளத்துடன், வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்களின் வாக்குகள் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

The post 1,07,083 வாக்குகள் பெற்ற வித்யாராணி வீரப்பன் appeared first on Dinakaran.

Related Stories: