சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு

திருச்சி: பெண் காவலர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில் கைதான யூடியூபர் சங்கரை கோவை சிறையில் இருந்து அழைந்து வந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பாக நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, லால்குடி சிறையில் அடைத்தனர். சென்னை மதுரவாயலை சேர்ந்த யூடியூபர் சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை தேனி பூதிப்புரம் விடுதியில் கடந்த 4ம்தேதி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யூடியூபர் சங்கர் மீது பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி மாவட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் சங்கர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8ம் தேதி திருச்சி மாவட்ட போலீசார், கோவை சென்று சிறையில் உள்ள சங்கரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் 11ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பெலிக்சின் வீடு, அலுவலகங்களில் திருச்சி மாவட்ட போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், கோவை சிறையில் உள்ள சங்கரை திருச்சிக்கு அழைத்து வருவதற்காக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்கள் நேற்று முன்தினம் இரவு கோவை சென்றனர். நேற்று காலை கோவை சிறையில் இருந்து திருச்சிக்கு ஒரு பெண் இன்ஸ்பெக்டர், 2 பெண் எஸ்.ஐ மற்றும் 6 பெண் காவலர்கள் பாதுகாப்புடன் சங்கர் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து, திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்துக்கு சங்கரை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் செருப்பை காட்டி சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் புடை சூழ சங்கர் அழைத்து செல்லப்பட்டு, நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் சங்கரை வரும் 28ம்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம், சங்கரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று மதியம் நடைபெறும் என்றும் அதுவரை சங்கரை லால்குடி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்காக அவரை மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து, பெண் போலீசார் சங்கரை பாதுகாப்பாக அழைத்து சென்று திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறையில் இரவில் அடைத்தனர். ஏற்கனவே பெலிக்ஸ் ஜெரால்டு பெண் போலீசார் புடைசூழ பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கும், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* சாதி கலவரம் தூண்ட முயற்சி மேலும் ஒரு வழக்குப்பதிவு
கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலில் சங்கர் பேசியபோது சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதை குறிப்பிட்டு கோவை அவினாசி ரோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்து (42),சாதி கலவரம் தூண்டும் வகையில் பேசிய சங்கர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் இந்திய தண்டனை சட்டம் 153, 153 (ஏ), 504, 505 என்ற பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் 2 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த பெண் எஸ்ஐ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

திருமணம் ஆகிவிட்டதா? வீடியோ வெளியிடுவேன்… பெண் காவலர்களை மிரட்டிய சங்கர்: நீதிபதியிடம் பரபரப்பு புகார்
நீதிபதி முன்பு ஆஜராகிய சங்கர், ‘ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்ஐ மற்றும் 6 போலீசார் அடங்கிய பெண் போலீஸ் குழுவினர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். வழியில் போலீசார் தாக்கியதில் எனக்கு உள்காயம் ஏற்பட்டு, உடல் முழுவதும் வலியாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை தேவை’ எனக்கேட்டார். இதையடுத்து, சங்கரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிபதி அனுமதி வழங்கினார். தொடர்ந்து அவரை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவரை முழுமையாக பரிசோதித்ததில், காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

மீண்டும் சங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, ஆஜரான வக்கீல்கள் சங்கரை அடித்த போலீசாரை அவர் அடையாளம் காட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு வக்கீல்கள், சங்கரின் குற்றச்சாட்டுக்கு போலீசார் விளக்கமளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனர். இதை நீதிபதி ஏற்கவே பெண் போலீசார் கூறுகையில்,‘‘நாங்கள் அவரை அழைத்து வரும் வழியில் எங்கள் நகம் கூட அவர் மீது படவில்லை. பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்கிறார். மாறாக அவர் தான், எங்கள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டார். திருமணம் ஆகிவிட்டதா? என்ற விவரங்களை பெற முயற்சித்தார். நான் வெளியில் வந்த பின்னர் உங்கள் ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியாக வீடியோ வெளியிடுவேன் என்றார்’’ என புகார் கூறினர்.

The post சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: