டூர் கிளம்புறீங்களா?

நன்றி குங்குமம் தோழி

இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

கோடைகாலம் வந்தாச்சு. ஸ்கூல் மற்றும் கல்லூரியும் லீவ் விட்டாச்சு. பொதுவாக ேகாடை விடுமுறையின் பயணங்களின் போது போட்டிங், அருவி குளியல், யானை சவாரி, குதிரை சவாரி, ஜிப் லைன் போவது வழக்கம். இது போன்ற இடங்களுக்கு செல்வதும் கோடைகாலத்தில் ஏற்றதாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவருடன் வருடத்தில் ஒரு முறை செல்லும் போது அந்த விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுவது முக்கியம். சுற்றுலாவில் மொத்த குடும்ப சந்தோஷமும் அடங்கி உள்ளது. அப்ப கூடுதல் கவனம் தேவை தானே! விடுமுறைக்கு டூர் செல்லும் போது இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் மகிழ்ச்சியான பயண அனுபவம் உங்களுக்கு நிச்சயம்.

ரூம் அட்வான்ஸ் புக்கிங்…

எந்த ஒரு விடுமுறையாக இருந்தாலும், அதற்கு மிகவும் முக்கியமானது ஓட்டல் ரூம் புக்கிங்தான். விடுமுறைக்கு எங்கு செல்ல இருக்கிறீர்கள் என்று திட்டமிட்ட உடனே புக்கிங் செய்திடுங்க. பொதுவாக கோடைகாலத்தில் நிறைய கூட்டம் வரும் என்பதால் தங்கும் அறைகள் கிடைப்பது சிரமம். அங்கே சென்று பார்க்கலாம் என்றால் அவஸ்தைதான். அதே சமயம் ஆன்லைனில் ரூம் புக் செய்யும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.

அவர்களின் இணையத்தில் காண்பிப்பது ஒன்றாகவும், நமக்கு தருவது வேறாகவும் இருக்கும். அதனால் கூடுமானவரை நன்றாக தெரிந்த நபர்களிடம் விசாரித்து ஓட்டல் அறையினை புக் செய்யுங்கள். இதற்காக அதிக செலவாகும் என்று பார்த்தால், குடும்பத்துடன் செல்லும் போது தங்குமிடம் வசதியாக இல்லை என்றால் மொத்த விடுமுறையும் வேஸ்ட் தான். தமிழக சுற்றுலா துறை மூலம் பட்ஜெட் விலையில் சிறந்த ஓட்டல்கள் உள்ளன. உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப புக் செய்து கொள்ளலாம்.

தண்ணீர், உணவு முக்கியம்…

நீங்கள் தங்கும் இடங்களில் தரமான உணவுகள் கிடைக்குமா என பாருங்கள். அப்புறம் உணவுக்காக அலைய வேண்டி வரலாம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சிறிது தூரம் நடந்தாலே எனர்ஜியை இழக்க வேண்டி வரும். அதனால் சாப்பிடாமல் மட்டும் இருக்காதீர்கள். கூடுமானவரை நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடலாம். அதே சமயம் கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டு வயிறு உபாதைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். சுற்றிப் பார்க்கும் போது உடன் தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து செல்லுங்கள்.

கையில் சின்னச் சின்ன பிரெட், பிஸ்கெட், கேக், சிப்ஸ், பழங்கள் போன்ற உணவுகளை வைத்துக் கொள்ளுங்கள். சுற்றும் இடத்தில் சரியான உணவு கிடைக்காத பட்சத்தில் இது போன்றவை அவசரத்திற்கு உதவும். குழந்தைகள் மற்றும் சர்க்கரை, பிபி நோயாளிகள் இருந்தால் தண்ணீர், பிஸ்கெட், பழங்கள் இல்லாமல் பயணிக்காதீர்கள். குறிப்பாக அந்த ஊர் ஸ்பெஷல் உணவுகளை ருசி பார்க்க தவறாதீர்கள். அதே சமயம் கையில் அவசரத்திற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்து செல்ல மறக்காதீர்கள்.

செல்ஃபி பிரியர்களுக்கு…

போகுமிடமெல்லாம் போட்டோ எடுத்து தள்ளுவதை குறைத்து கொள்ளுங்கள். நேர விரயம் அதிகமாகி பல இடங்களை பார்க்காமலே போய்விட வாய்ப்புகள் உண்டு. ஆசைக்கு ஒன்றிரண்டு படங்களோடு நடையை கட்டுங்கள். அந்தந்த இடத்தின் அழகை சில நிமிடங்களாவது அனுபவியுங்கள். எல்லாவற்றையும் கேமரா வழியாவே பார்க்காதீர்கள். உங்கள் இயற்கை கண்களால் இயற்கையை அனுபவியுங்கள். போட்டோ எடுத்து உங்களின் சமூக வலைத்தளங்களில் பகிரலாம். ஆனால் அதுவே உங்களின் முழு டூர் நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடாது.

வாகனம்…

நாம் சுற்றுலா செல்வதே சுற்றிப் பார்க்க தானே. கூடுமானவரை உங்கள் ஊரிலிருந்தே சொந்த வாகனத்தில் வருவது நல்லது. அப்படியான சூழல் இல்லையெனில் சுற்றுலா வந்த இடத்தில் வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வாடகை வாகனம் எடுக்கும் போது, அதற்கான விலையினை தெளிவாக பேசிக்கொள்ளுங்கள். முடிந்த வரை அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களை தவறாமல் பார்த்துவிடுங்கள்.

அதற்கு ஏற்ப நீங்கள் டிரைவரிடம் பேசி பிளான் செய்து கொள்ளுங்கள். டூர் செக் லிஸ்ட் மூலமாகவும் உங்களின் நேர மேலாண்மையினை கையாளுங்கள். கூடுமானவரை வாகன ஓட்டிகளிடம் விவாதங்களோ சண்டையிடவோ செய்யாதீர்கள். அது உங்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பான மற்றும் மகிழ்வான பயணமாக இருக்காது. சிநேகமாக நடத்தினால் அவர்களும் நெளிவு சுளிவுகளோடு பல விஷயங்களை அட்ஜட் செய்து கொண்டு உங்களுக்கு பெரிதும் உதவுவார்கள்.

லக்கேஜ்கள் அதிகம் வேண்டாமே…

நீங்கள் இடங்களை சுற்றிப்பார்க்க தான் செல்கிறீர்கள். குறைந்த அளவு ஆடை அணிகலன்களை எடுத்துச் சொல்லுங்கள். போட்டோ ஷூட்டிற்கு போவது போல உடைகளை அள்ளி போட்டுக் கொண்டு செல்லாதீர்கள். லக்கேஜ்களை தூக்க முடியாமல் அவதிப்படுவதோ அல்லது பொருட்கள் தொலைந்து போகவும் வாய்ப்புள்ளது. சுற்றுலாவிற்கு தங்க நகைகள் அவசியமில்லை. Less luggage more comfort என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது உடைக்கு மட்டுமல்ல உணவிற்கும் பொருந்தும்.

பாதுகாப்பாக பயணியுங்கள்…

சுற்றுலா செல்லும் இடங்களில் அறிவிப்பு பலகையை அலட்சியப்படுத்தி அவஸ்தைப்படாதீர்கள். விலங்குகள் உலாவும் இடங்கள், பாதுகாப்பற்ற இடங்கள், ஆபத்தான மலைப் பாதைகள், ஆழமான நீர் நிலைப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை படித்து அதனை பின்பற்றுங்கள். யானை, கரடி, சிறுத்தையை படமெடுக்கிறேன் என சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நீர்நிலைகளுக்கு செல்லும் போது நீச்சல் தெரியுமென்றாலும் ஆழந்தெரியாமல் காலை விடாதீர்கள்.

இங்கு மட்டுமல்ல மலைப்பாதைகள் சரிவுகளிலும் மிகுந்த கவனம் தேவை. இயற்கை எவ்வளவு அழகானதோ அதேபோல் ஆபத்துகள் நிறைந்தது. செல்ஃபி மோகத்தில் வாழ்க்கையை இழக்காதீர்கள். பாதுகாப்பற்ற இடங்களில் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுக்காதீர்கள். இதனை கவனத்தில் கொண்டு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினால் பயணங்கள் மகிழ்ச்சியை தருவதோடு வாழ்நாள் முழுவதும் நீங்கா நினைவாக இருக்கும்.

தொகுப்பு: தனுஜா

The post டூர் கிளம்புறீங்களா? appeared first on Dinakaran.

Related Stories: