ஜோதிட ரகசியங்கள்

நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டுமா?

ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகம் என்று தனியாக எதுவும் இல்லை. ஆனால், பிறந்த ஊரை விட்டு தூர தேசங்களுக்குப் பயணப்படுதல் என்பது குறித்த சில விஷயங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. அவைகளை கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்ப யூகித்து, வெளிநாட்டு யோகம் உண்டு – இல்லை என்று சொல்கின்றோம். பொதுவாகவே மூன்றாம் இடம், ஐந்தாம் இடம், ஏழாம் இடம், ஒன்பதாம் இடம், 11 இடம் பிரயாணங்களைக் குறிக்கக்கூடிய இடங்கள். அதிலே சிறிய பிரயாணம், நீண்ட தூர பிரயாணம் என்று அடுக்குகள் உண்டு. குறிப்பாக, மூன்றாம் இடம் சிறிய பிரயாணங்களைக் குறிக்கக்கூடிய இடம். பிரயாண இடம், சர ராசிகளில் இருந்தால், அவர்கள் அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வார்கள்.

காரணம், சரம் என்பது ஒரு இடத்தில் நிற்காதது என்று சொல்லலாம். ராசிகளை சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என்று பிரித்து இருக்கிறார்கள். ஒருவருடைய நான்காவது இடம், ஸ்திர ராசியாக அமைந்துவிட்டால், அவர் பெரும்பாலும் பூர்வீகத்தில் இருப்பார். ஆனால், ஜாதக பலன்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கிரகத்தை வைத்தோ அல்லது குறிப்பிட்ட கட்டத்தை வைத்தோ முடிவெடுத்து விடுவதல்ல. நடைபெறுகின்ற தசா புத்திகள் ஒத்துழைக்க வேண்டும். கோசாரங்கள் சாதகமாக இருக்க வேண்டும்.

அப்பொழுது வெளிநாடு யோகத்தை (ஒரு காலத்தில் அது சோகம்; இப்போது யோகம்) பரதேசத்தில் வாழ்வது என்று ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். உதாரணமாக ஒருவருடைய 6, 8, 12 முதலிய இரட்டைப்படை ராசிகள் வலுவடைந்துவிட்டால், அவர்கள் ஊரை விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக சென்று விடுவார்கள். இந்த ராசிகள், அசுப பலத்தோடு இருந்தால், பிரச்னைகளினால் வெளியேறுவார்கள். உதாரணமாக, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வெளியேறுபவர்கள் உண்டு. மான அவமானங்களுக்குப் பயந்து ஊரை விட்டு வேறு ஊர்களில் வாழ்பவர்கள் உண்டு. இவைகள் எல்லாம் 6, 8, 12 இடங்கள் சுட்டிக் காட்டும். இதே ஆறு, எட்டு, பன்னிரண்டு இடங்கள் சுபயோகங்களோடு அமைந்துவிட்டால், அவர்களும் ஊரை விட்டு வெளியேறுவார்கள்.

ஆனால், அது தொழிலுக்காக இருக்கும். படிப்புக்காக இருக்கும். வேலைக்காக இருக்கும். இதன் மூலம், நல்லபடியாக வருமானமும் கௌரவமும் கிடைக்குமா என்பதற்கு பத்தாம் இடத்துத் தொடர்பையும் (ஜீவனம்) இரண்டாம் இடத்துத் தொடர்பையும் (தனம்) பார்க்க வேண்டும்.

இரண்டாம் இட தொடர்பு பலமாக இருந்தால், அவர்கள் ஊரைவிட்டு வெளியே சென்றாலும், மிகச் சிறந்த வருமானத்தை செய்வார்கள் என்று முடிவெடுத்துவிடலாம். அதைப் போலவே, பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் தொழில் மிக நன்றாக இருக்கும். இரண்டாம் இடம், பத்தாம் இடம், 12-ஆம் இடம் சுபமாக இருந்து, அந்தந்த தசா புத்திகள் நடந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமையும் யோகம் கிடைக்கும். இதற்கு உதாரணமாக, ஒரு ஜாதகத்தைப் பார்க்கலாம். இவர் வெளிநாட்டிலே மருத்துவராக இருக்கின்றார். மிதுன லக்னம். லக்கினத்தில் சந்திரன். எனவே, ராசியும் லக்கினமும் ஒன்றாகிவிடுகிறது. இரண்டாம் இடத்தில் ராகு.

நான்காம் இடமான கன்னியில் குரு சுக்கிரன் சனி. ஐந்தாம் இடத்தில் சூரியன் புதன். ஆறாம் இடத்தில் செவ்வாய். எட்டாம் இடத்தில் கேது. மிதுன லக்னம் என்பதால், பத்தாம் இடம் என்பது மீனத்தில் அமைகிறது. மீனம் என்பது நீர் ராசி. பத்தாமிடம் நீர் ராசியாக அமைந்ததால், கடல் கடந்த பயணம் உண்டு என்று ஒரு முடிவுக்கு வரலாம். மீன ராசிக் குரிய குரு, கன்னியிலிருந்து மீனத்தைப் பார்ப்பதால், பத்தாம் இட தொடர்பு அதிகரிக்கிறது. ஆறாம் இடம் விருச்சிகம். செவ்வாய் ஆட்சி பெற்று வலிமையான சந்திரனோடு எட்டாம் பார்வையால் இணைகிறார். இப்பொழுது லக்கினத்திற்கும் செவ்வாய்க்கும் (ஆறாம் இடத்திற்கும்) சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

எட்டுக்குரிய சனி, குரு சுக்கிரன் முதலிய இரண்டு சுபகிரகங்களோடு இணைந்து ஏழாம் பார்வையாக பத்தாம் இடத்தைப் பார்ப்பதால், எட்டாம் இட சனியோடு 10ம் இடமும் 12ம் இடமும் தொடர்பு பெற்றுவிட்டது. இப்பொழுது 6, 8, 12 தொடர்புகள் ஜீவனஸ்தானத்தோடு மிகப் பலமாக பிணைக்கப்பட்டுவிட்டன. எனவே, இதை பார்த்த உடனே வெளிநாட்டில் வசிக்கக் கூடிய மருத்துவர் ஜாதகம் என்பதைக் கண்டு பிடித்துவிடலாம். அதோடு ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய், நேர் பார்வையாக 12-ஆம் இடத்தில் பார்ப்பதால், ஆறாம் இடமாகிய வேலை ஸ்தானமும், 12ஆம் இடமாகிய வெளிநாடு (பரதேசம்) தொடர்பும் வர, 12க்கு உரிய சுக்கிரன் நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் 6, 8, 12 இடங்கள் லக்னத்தோடு சம்பந்தப்பட்டு, பலமடைந்திருப்பதை இந்த ஜாதகத்தில் காண முடியும்.

ராசியும் லக்கினமும் ஒன்றாக இருப்பதால், ராசிக்குத் தனியாகப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, வெளிநாட்டு யோகம் வேண்டும் என்று சொன்னால், 6, 8, 12 ராசிகள் பலமாகவும், சுபமாகவும் இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே சொன்னது போல், அது தீய பலத்தோடு இருந்தால், வேறு மாதிரியான துர்பலன்களைத் தரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிலர் தொடர்ந்து வெளிநாட்டில் இருக்க முடியாமல் திரும்ப தாய் நாட்டுக்கு வந்து விடுகிறார்களே என்று சொன்னால், அவர்கள் ஜாதக 6, 8, 12 இடங்கள் பலமாக இருந்தாலும் கூட, அதற்குரிய திசா காலங்கள் அவர்களை வெளிநாட்டில் இருக்க அனுமதிக்க வில்லை என்று பொருள்.

சிலருக்கு அடுத்தடுத்த 6, 8, 1 2 திசைகள் சுப திசைகளாக நடைபெறும். உதாரணமாக, ராகுதிசை, சனிதிசை, குருதிசை என அடுத்தடுத்து வந்தால், ராகுதிசை 18 வருஷம், குருதிசை 16 வருஷம், சனிதிசை 19 வருஷம் என 53 வருடங்கள் வெளிநாட்டில் இருக்கும் வாய்ப்பு வந்துவிடும். அங்கேயே குடியுரிமை பெற்று இருப்பது போலத்தான். அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஜாதகங்களைப் பார்த்தால் தெரியும்.

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: