திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள்

பெருமாளின் கருணைக்குதான் அளவேது! தான் ஒரு பெயரில், ஒரு தலத்தில், ஒரு கோயிலில் மட்டும் அர்ச்சாவதாரமாக வீற்றிருந்தால், தன் தரிசனம் பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்குக் கிட்டாது என்பதைப் புரிந்தவர். அதனாலேயே ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களில் அவர் கோயில் கொண்டிருக்கிறார். இந்த வகையில் காஞ்சிபுரத்தில் வரதராஜனாகத் திருக்காட்சி நல்கிய அவர், திருநாங்கூரிலும் திருமணிக்கூடம் என்ற திவ்ய தேசத்தில் அதே வரதராஜனாக அருள் பரிபாலிக்கிறார். காஞ்சிபுரம் சென்று தன்னை தரிசிக்க பக்தர்கள் படும் வழித் தொல்லை மற்றும் உடல் நலிவைக் கருத்தில் கொண்டு, வேறு சில இடங்களிலும் வரதராஜனாகவே காட்சியளிக்கிறார். அந்தப் பிறிதொரு இடப் பெருமையை திருமணிக்கூடமும் பெற்றிருக்கிறது. புராணக் கதைப்படி சந்திரனுக்காகவே இந்தத் தலத்தில் அவர் வரதராஜனாகத் தோன்றியிருக்கிறார் என்று தெரிகிறது. இதே சந்திரனுக்காக அவர் திருஇந்தளூர், தலைச்சங்க நாண்மதியம் ஆகிய திவ்ய தேசங்களிலும் எழுந்தருளியிருக்கிறார். சரி, அது என்ன கதை?இரண்டாம் முறையாகத் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான் தட்சன். இரு சந்தர்ப்பங்களிலும் அவனது வருத்தத்துக்கு அவனுடைய மகள்கள்தான் காரணம் என்பதுதான் விசித்திரம்.

சந்திரன் பரிபூரண அழகன். என்றும் முழு நிலவாக உலவியவன். அவன் உலா வருகிறான் என்றால் வானமே சிலிர்த்துக்கொள்ளும். அவனது பட்டொளி தன்மீதெங்கும் வியாபிக்கும் வண்ணம் தன்னைக் குறுக்கிக்கொள்ளவும், நெருக்கிக்கொள்ளவும் செய்யும். நட்சத்திரங்கள் எல்லாம் அவன் ஒளிகண்டு வெட்கப்பட்டு, சிமிட்டிக்கொண்டு மறையும். தன்னிடமிருந்து ஒளியை கிரகித்துக்கொண்டுதான் சந்திரன் ஒளிர்கிறது என்ற பெருமித மனப்பான்மை சூரியனிடம் இருந்தாலும், தன்னளவு உக்கிரம் இல்லாமல், தண்ணென குளிர்ச்சியாக விளங்குகிறதே இந்த நிலவு என்ற பொறாமையும் கொண்டிருந்தது. வானில் உலா வரும் சந்திரனின் பிம்பத்தை முழுமையாக பிரதிபலிப்பதில் பெருமை கொண்டன பூமியில் உள்ள நீர்நிலைகள். இப்படி இயற்கையே மோகிக்கும் சந்திரனை, பெண்கள் மோகித்ததில் ஒன்றும் வியப்பில்லையே! ஆனால் ஒட்டுமொத்தப் பெண்களும் அவனையே மணக்க வேண்டும் என்று விரும்பியபோதுதான் சிக்கலே எழுந்தது. அந்த வகையில் தட்சனுடைய 27 பெண்களும் அவனைத் தன் மணாளனாக்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். இதனால்தான் முதல்முறையாக தட்சன் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். இதற்கு சந்திரன் மனம் இசைவானா என்பதே தட்சனுக்குப் பெருங்கவலையாகிப் போய்விட்டது. சந்திரனுக்கு அந்தத் தகவல் வந்தது. இருபத்தேழு பெண்களில் அவனுடைய உள்ளம் கவர்ந்தவள் ரோகிணிதான். அவளையே அவன் மணக்க விரும்பினான்.

ஆனால் பிற இருபத்தாறு பெண்களும் தன்னையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிந்து அவன் அதிர்ச்சியுற்றான். அதுமட்டுமல்லாமல், ஒரு தந்தை என்ற முறையில் தன் பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தட்சனும் முனைப்பாக இருக்கிறான் என்பது கூடுதல் அதிர்ச்சி. சந்திரனுக்கு வேறு வழி தெரியவில்லை. ரோகிணியை அவன் மணக்க வேண்டுமானால், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான பிற எல்லா பெண்களையும் அவன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்! அரை மனதுடன் ஒப்புக்கொண்டான் அவன்.அத்தனை பெண்களுக்கும் ஒரே கணவனாக சந்திரன் அமைந்ததில் தட்சனுக்கு தயக்கத்துடன் கூடிய சந்தோஷம்தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாதது மட்டும் அல்ல காரணம்; தன் பெண்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள் என்றால் அவர்களுக்கெல்லாம் நடுநாயகன் சந்திரன்தானே என்ற இயற்கையை ஒட்டிய சமாதானமும் ஒரு காரணம்!ஆனால், திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே ரோகிணியைத் தவிர பிற இருபத்தாறு பெண்களும் அழுது புரண்டபடி தன்னிடமே திரும்ப வருவார்கள் என்று தட்சன் எதிர்பார்க்கவில்லைதான். வந்த அவர்கள் தங்களை சந்திரன் முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகவும், அவன் ரோகிணியுடன் மட்டுமே குடும்பம் நடத்துவதாகவும் முறையிட்டபோதுதான் இரண்டாவதுமுறையாகத் தலையில் கைவைத்துக் கொண்டான் தட்சன்.

இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று குழம்ப ஆரம்பித்தபோது, பாதிக்கப்பட்ட மகள்கள் செய்த அலப்பறையால் கோபத்தின் உச்சிக்கே சென்றான் அவன். என்ன செய்வது, பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்ற கோணத்தில் அவனை சிந்திக்க விடாமல் கோபம் முன்னின்று தடுத்தது. அவ்வளவுதான், பிடி சாபம் என்று ஆர்த்தெழுந்தான். கொஞ்சமும் யோசியாமல், எந்த அழகால் என் இருபத்தேழு பெண்களையும் நீ ஈர்த்தாயோ, அந்த அழகு உனக்கு இல்லாமல் போகட்டும் என்று சபித்துவிட்டான். அதன் விளைவு, சந்திரன் முற்றிலும் பொலிவிழந்துவிட்டான். சந்திரன் தோன்றாத வானம் அப்படியே இருண்டுவிட்டது. இரவு நேரச் சூரியன்போல வலம் வந்து கொண்டிருந்த அவன் அந்த இருளில் காணாமல் போனான். இரவுப் பொழுது இயற்கையை அப்படியே புரட்டிப் போட்டது. சந்திரன் ஒளிராததால், அவனுடன் இணைந்திருந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒளி இழந்தன. சாபத்தின் பலனை சந்திரன் மட்டுமல்லாமல், இந்த உலகமே அனுபவித்தது! பகலில் சூரியன், இரவில் சந்திரன் என்ற இரு வேளைகளிலும் ஒளி படர்ந்த வாழ்க்கை, சூரியன் மறைந்த பிறகு மொத்தமாக இருளோடிப்போனதால் தேவர்கள், மக்கள் அனைவருமே திகைத்துத் தடுமாறினார்கள்.

தன்னை பீடித்த சாபம், தன்னை மட்டுமல்லாமல், தன் மனைவியர் மட்டுமல்லாமல், தேவருலகம், பூவுலகம் எல்லாவற்றையும் பாதிப்பதை உணர்ந்த சந்திரன், பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்று தன் சாபம் நீங்க வழிதேடினான். அப்படி ஒவ்வொரு தலமாக வந்த அவன், நிறைவாக திருநாங்கூர் திருமணிக்கூடத்தை அடைந்தான். அங்கே ஒரு நீர்நிலையை உருவாக்கி, நீராடினான். அங்கே எழுந்தருளியிருந்த வரதராஜப் பெருமாளை வணங்கிக் கண்ணீர் உகுத்தான். அவனெதிரே மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன், சந்திரனுடைய இடர் களைய அருளினான். ஆனாலும் தட்சன் இட்ட சாபத்துக்கும் மதிப்பளிக்க வேண்டியிருந்ததால், முற்றிலும் வானில் தோன்றாதிருந்த சந்திரனை, ஒவ்வொரு கலையாக வளர்தலும் பிறகு பௌர்ணமியாகப் பரிமளித்தலும்; ஒவ்வொரு கலையாக தேய்தலும், பிறகு அமாவாசையாக இருள் கொள்ளுதலுமாகத் தோன்றுமாறு செய்தார் பெருமாள். இப்படி சந்திரனுக்கு அருளிய எம்பெருமான், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வாழ்வில் என்றென்றும் பிரகாசத்தையே வழங்குகிறார். சரும நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, சரும நிறமாற்றக் குறை கொண்டவர்களுக்கு, புத்தொளி மென் சருமம் அமையச் செய்கிறார். திருமணிக்கூட நாயகன், கஜேந்திர வரதன் என்றெல்லாமும் இந்த வரதராஜன் போற்றப்படுகிறார். தாயார், திருமாமகள் நாச்சியார் என்ற தேவி. கருவறையில் தேவி, பூதேவி சமேதராக திவ்ய தரிசனம் தருகிறார் அண்ணல்.

இத்திருத் தலத்தை பத்துப் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்திருக்கும் திருமங்கயாழ்வார், காளிங்க நர்த்தன கண்ணன், விஷ்ணு துர்க்கை ஆகியோருடன் தனி சந்நதியில் தானும் கொலுவிருக்கிறார்.ஏற்கெனவே வரதரா ஜரை காஞ்சிபுரத்தில் மங்களாசாசனம் செய்து விட்ட நிறைவிலோ என்னவோ, இந்தப் பெருமாளை, திருமங்கை யாழ்வார் தன் பாசுரங்களில் பெரும்பாலும் கிருஷ்ணனாகவே (ஒரு பாட்டில் ராமனாகவும்) கண்டு,பாடி மகிழ்ந் திருக்கிறார். ‘…மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை…’, ‘கவ்வை வாளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து…’, ‘தடக்கைமா மருப்பு வாங்கி பூன்குருந்து ஒசித்துப் புள்வாய் பிளந்து…’, என்றெல்லாம் கிருஷ்ண லீலைகளை வியந்து, இந்த வரதராஜனுக்கான பாசுரமாக இயற்றியிருக்கிறார் ஆழ்வார். ‘கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய்திறந்து தன்மேல் வருமவள் செவியும், மூக்கும் வாளினால் தடிந்த எந்தை பெருமகள் பேதைமங்கை தன்னோடும் பிரிவு இலாத திருமகள் மருவு நாங்கூர்த் திருமணிக்குடத்தானே’ என்று ராமனாகவும் பாவித்துப் பாடி நெகிழ்கறார். தசாவதாரங்களிலேயே தனிச் சிறப்புப் பெற்று விளங்குவது கிருஷ்ணாவதாரம். தான் வாழ்ந்த துவாபர யுகத்துக்கு அடுத்ததான கலியுகத்தில் வாழப்போகும் மக்களுக்குத் தேவையான விஷயங்களை பகவத் கீதையாகப் பாடியும், நீதிபோதனைகளை வகுத்துக் கொடுத்தும் பெரிதும் அக்கறை எடுத்துக்கொண்டவர் பரமாத்மா கிருஷ்ணன். அவரை ஒவ்வொரு தலத்திலும், ஒவ்வொரு பக்தரும் நினைவு கூர்ந்து, நன்றி செலுத்தும் வகையாகத்தான் சில திவ்ய தேசங்களில் உறையும் பெருமாள்களைப் பாடிய ஆழ்வார்களும் கிருஷ்ணனை இணைத்தே பாடிவந்திருக்கிறார்கள். அப்படி ஒரு பாக்கியம் திருமணிக்கூடத்திற்கும் கிடைத்திருக்கிறது!

தியான ஸ்லோகம்

தேவ! ஸ்ரீ மணி கூட நாயக ஹரி: தத்ப் ரேயஸீ சேந்திரா
புண்யம் சந்த்ரஸரோ விமாநமபிதத் தத்ர ப்ரஸந்நாஹ்வயம்
பக்ஷீசேந புராஸமஸ்த ஜகதாம் க்ஷேமாயஸாக்ஷாத் கிருத:
பூர்வாம் போதி முகோ விராஜதி ரமா நீளாத ராஸங்கத:

எப்படிப் போவது: திருத்தெற்றியம்பலக் கோயிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமணிக்கூடம். முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டு சீர்காழியிலிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ அமர்த்திக் கொண்டு, இக்கோயிலுக்கு வரலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11 மணிவரையிலும், மாலை 4 முதல் 6 மணிவரையிலும்.
முகவரி: அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106.

The post திருமணிக்கூடம் வரதராஜப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: