செம்பொன்செய் கோயில் அரங்கப் பெருமாள்

மனதை வருத்திக் கொண்டிருக்கும் பெருந்துன்பம், சில சமயங்களில் எந்த ஆறுதலாலும் நீங்காது. பலர் எவ்வளவுதான் ஆதரவாகப் பேசினாலும், ஆறாத அந்த ரணம், திடீரென்று ஒருவரைப் பார்ப்பதாலோ, அவருடைய கனிவானப் பேச்சைக் கேட்பதாலோ, பளிச்சென்று முற்றிலுமாக ஆறி, வேதனைப்பட்ட சுவடே இல்லாமல் போய்விடுவதை நம்மில் சிலர் அனுபவத்தில் உணர்ந்திருப்போம். இந்த உணர்வு ராமபிரானுக்கே ஏற்பட்டிருக்கிறது! ‘உத்தம அமர்த்தலம் அமைத்ததோர் எழில் தனுவின் உய்த்தகணையால் அத்திர அரக்கர்முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்’ என்று தேசிகப் பிரபந்தத்தில் கூறப்பட்டபடி, மிக எளிதாக ராவணனை வதம் செய்யும் ஆற்றல் பெற்றவராக இருந்தாலும், அப்படி வதம் செய்ததால், மிகுந்த மன வருத்தத்துக்குள்ளானார் ராமன். ஆமாம், வேதங்களைப் பழுதறப் பயின்றவன் ராவணன். அந்த வேதங்களை யாழில் இசைத்து பரமேஸ்வரனையே
நெகிழ்வித்தவன்.

இப்படிப்பட்ட வேத விற்பன்னனைக் கொன்றது தனக்கு பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கியிருக்குமோ என்று அச்சக் கவலைப்பட்டார். அந்தப் பாவத்தை போக்கிக்கொள்ள தலயாத்திரை மேற்கொண்டார். அந்தந்தத் தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினார்; அந்தந்த கோயில்களுக்குள் சென்று இறைவனைத் துதித்தார்; தன் பாவம் போக்குமாறு இறைஞ்சினார். ஆனால் அப்படி பிரார்த்தனை செய்துவிட்டு அந்தக் கோயிலை விட்டு வெளியே வந்தபோதும், மனசிலிருந்து கவலை மறையாதிருப்பதை உணர்ந்தார்.

தனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கக் கூடிய பரம்பொருளை தான் இன்னும் தரிசிக்கவில்லை என்ற உண்மையையும் உணர்ந்தார். இவ்வளவு ஏன், காவிரிக்கரையில் கோயில் கொண்டிருக்கும் தன் குலதெய்வமான திருவரங்கனை வழிபட்டும் மனம் ஒரு நிலைப்படாததையும், வதம் செய்த வருத்தம் நீங்காமலும் தவித்தார் அவர். பிறகு, திருவெண்காட்டிற்கு அருகே உள்ள பலாசவனத்தை அடைந்தார். அங்கிருந்து திருநாங்கூர் பகுதிக்கு வந்தார். தாமோதரன், அர்ச்சாவதார மூர்த்தியாகக் கருவறை கொண்டிருக்கும் செம்பொன் அரங்கர் திருக்கோயிலுக்குச் சென்றார்.

இந்த செம்பொன் அரங்கன் கோயில் பகுதியில், த்ருடநேத்ரர் என்ற மகாமுனிவர் வாழ்ந்துவந்தார். இவர், கௌசிக முனிவரின் புதல்வராவார். இவரைச் சந்தித்த ராமன் தன் மனக்குறையை அவரிடம் வெளிப்படுத்தினார். சரியான குருவின் வழிகாட்டல் மன இருளை நீக்கவல்லது என்பதை ராமன் இங்கே உணர்ந்துகொண்டார். த்ருடநேத்ரர், ராமனிடம், திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அஸ்வமேத யாகம் செய்யுமாறு அறிவுறுத்தினார். பிறகு தங்கத்தால் ஒரு பசு உருவம் செய்து, அந்தப் பசுவுக்குள் அமர்ந்தபடி, நான்கு நாட்களுக்கு தவமிருக்கும்படி சொன்னார். அதன் பிறகு, அந்த தங்கப் பசுவை, வேதம் வல்ல அந்தணருக்கு தானமாக வழங்கிவிடும் படியும் யோசனை சொன்னார்.
அதன்படி ராமன் அஸ்வமேத யாகம் நடத்தினார்.

அந்த யாகத்தில் வேத வித்தகர்களும், முனிவர்களும், ஏன் தேவர்களும்கூட கலந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரது ஆசிகளும் ராமனு டைய மனப்புண்ணுக்கு நல்மருந்தாக அமைந்தன. அடுத்ததாக பொன்னால் பசு உருவம் ஒன்றைச் செய்து அதனுள் அமர்ந்து தவமியற்றினார். பிறகு முனிவர் கூறியதுபோல அந்தப் பசுவை தானமளித்தார். பளிச்சென்று மனசு ஒரு நிலைப்பட்டது. கவலை இருள் நீங்கியது. பொற்பசுபோல உள்ளமும் பளிச்சென்று, எந்த மாசுமில்லாமல் ஒளிர்ந்தது.

இவ்வாறு தானம் பெற்ற அந்தணர் அந்தத் தங்கப்பசுவைக் கொண்டு, ராமனின் பிரம்மஹத்தி தோஷம் போக்கிய தாமோதரனுக்கு அழகிய கோயில் ஒன்றை உருவாக்கினார். அப்போதிலிருந்து தாமோதரனும், செம்பொன் அரங்கர் என்று பெயர் பெற்றார். கோயிலும், செம்பொன்செய் கோயில் என்றானது.

இந்தப் பொற்கோயிலினுள் நுழைந்தபோது வலது பக்கத்தில் பக்தர்களுக்கான ஒரு வசதி கவனத்தை ஈர்த்தது. அது, கழிப்பறை வசதி! பொதுவாகவே, இந்தப் பகுதியில் பிற கோயில்களில் காணக்கிடைக்காத வசதி இது. கருடாழ்வார் வணங்கி வழிவிட, கோயிலினுள் சென்றால் நேர் எதிரே செம்பொன்செய் அரங்கர் திருக்காட்சி நல்குகிறார். கருவறை மண்டபத்தின் மேல் விதானத்தில் தசாவதார ஓவியங்கள் தங்களை இன்னும் அழகாகப் பராமரிக்கலாம் என்று ஏக்கமாகக் கூறுவதுபோல ஆங்காங்கே வர்ணம் இழந்து, பொலிவு குன்றி காட்சியளிக்கின்றன. இவர்களோடு ஸ்ரீசெம்பொன்செய் அரங்கர் ஓவியமும் அவ்வாறே ஏங்குகிறது.

கருவறையில் பேரருளாளப் பெருமாள் என்ற தாமோதரன் ஒளிமிகுத்து அருள் செய்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, நின்ற கோலத்தில் கொலுவிருக்கும் இவரை தரிசித்தாலே காஞ்சி, திருவேங்கடம், திருவரங்கப் பெருமாள்களை தரிசனம் செய்ததற்குச் சமமான பலன்கள் கிட்டும் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள். உற்சவர் செம்பொன் அரங்கர் என்றும், ஹேமரங்கர் என்றும் அருள்பாலிக்கிறார். ஹேமா என்றால் தங்கம் என்று பொருள். பக்தரின் வறுமையைப் போக்க வல்லப் பேரருளாளன் இவர். இதற்கும் ஒரு புராண சம்பவம் உதாரணமாகத் திகழ்கிறது.

காஞ்சி மாநகரில் காச்யபன் என்ற அந்தணன் மிகுந்த வறுமையில் உழன்றான். தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற தந்தையார் படும் கடும் சிரமங்களைக் கண்ட மகன் முகுந்தன், குடும்பத்து வறுமையை ஒழித்து தந்தையாரின் மனதில் நிம்மதி விளையச் செய்ய தீர்மானம் கொண்டான். உழைத்துப் பிழைக்க அந்தப் பகுதியில் வழியில்லாததை அறிந்த அவன், அங்கிருந்து புறப்பட்டான்; திருநாங்கூர் திவ்ய தேசம் வந்தடைந்தான். அங்கே ஒரு முனிவரை தரிசித்தான். தன் குறையைச் சொல்லி அழுதான். அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அந்த மகாமந்திரத்தை அங்கேயே எம்பெருமான் திருவடிவம் முன் அமர்ந்தபடி, மூன்று நாட்கள் 32,000 முறை உருவேற்றி பெருமாளுக்கு அருட்சேவை புரிந்தான்.

அவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு பொன் அருளி ஆசி வழங்கினார். அவனது வறுமையும் தீர்ந்தது. இவ்வாறு தன்னை உறுதியாக வழிபட்ட பக்தனுக்கு பொன் அளித்து அவன் வறுமையை போக்கியதால் செம்பொன் அரங்கன் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அல்லிமாமலர்த் தாயார் என்று போற்றப்படும் தாயார் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார். தன் இறைவன், பக்தர்களின் வறுமைக் குறை தீர்க்கும் புரவலனாகத் திகழ்வதைப் புன்முறுவலுடன், பெருமையுடன் பார்த்து மகிழ்கிறாள். தாயாரின் சந்நதியில் சந்தான கிருஷ்ணனும் காட்சிதருவது, பக்தர்களின் மழலை பாக்கியத்தையும் அவள் அருளவல்லவள் என்பதைப் புரியவைக்கிறது.

“பிறப்பொடு மூப்பொன்றில்லவன் றன்னைப்
பேதியா வின்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக் கழிவு மானானை
ஏழிசையில் சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கை, நன்னடுவுள்
செம்பொன் செய், கோயிலுள்ளே
மறைப்பெரும் பொருளை வானவர் கோனை
கண்டு நான் வாழ்ந்தொழைந்தேனே’’

– என்று இந்த செம்பொன்செய் அரங்கனைப் போற்றிப் பாடுகிறார், திருமங்கையாழ்வார். மூப்பில்லா பருவத்தினன், பார்ப்போரை இன்புறச் செய்பவன், அன்பரின் இறப்பைத் தள்ளிப்போடும் ஆற்றல் மிக்கவன், வேதமுணர்ந்தோர் தொழுதேத்தும் சீராளன், மறைபொருளாகவே அருள் செய்யும் தேவர்களின் தலைவன் என்றெல்லாம் புகழ்ந்து மகிழ்கிறார்.

தியான ஸ்லோகம்

“தஸ்மிந் நுத்தம ஹேம நிவஸே நாம் நாக்ருபா வாந்ஹரி:
தேவீ குட்மல பங்கஜா கமலிநீ நித்யம் விமாநம் ததா
ப்ராசீதிக் விலஸந் முகச்ச கருணா வாராந் நிதி: ச்ரீநிதி:
ப்ரத்யக்ஷோ த்ருடநேத்ர திவ முநயே நித்யைஸ் ஸமம்ஸுரிபி:’’

எப்படிப் போவது: திருவண் புருஷோத்தமம் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ளது, செம்பொன்செய் கோயில். முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு சீர்காழியிலிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ அமர்த்திக் கொண்டு, இக்கோயிலுக்கு வரலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 9 மணிவரையிலும், மாலை 5 முதல் 7.30 மணிவரையிலும்.

முகவரி: அருள்மிகு செம்பொன்னாங்கர் பெருமாள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106.

The post செம்பொன்செய் கோயில் அரங்கப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: