அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம்

நம்மில் அனைவருக்கும் பெரிய ஆசைகளும் சிந்தனைகளும் இருக்கும். ஆனால், அதற்கான பொருளாதாரம் நம்மிடம் இல்லாததால் அதற்காக எல்லாவற்றையும் தள்ளிவைத்துக்கொண்டே வருகிறோம். எப்பொழுதுதான் பொருளாதாரம் மேம்படும். இந்த பிரச்னை நமக்குமட்டும்தான் என்று நினைக்கிறோம். ஆனால், எல்லோரும் இதே போன்ற மனநிலையில்தான் இருப்பது நமக்கு தெரியாது. தனிநபரின் இயக்கமானது பிறந்தகால நேரத்தையும் நிகழ்கால கோட்சாரத்தையும் அடிப்படையாகக்கொண்டே இயங்குகிறது. பெரிதளவு மாற்றம் செய்ய முடியாவிட்டாலும் முடிந்தளவு மாற்றத்தை ஜோதிடத்தின் அடிப்படையில் செய்து சில விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்கள்: லிங்க ரூபத்தில் உள்ள சிவபெருமானையும் அம்பாளை யும் நீங்கள் வழிபாடு செய்து நெய்வேத்தியத்தை படைத்து தானம் செய்துவிட்டு, லிங்கத்திற்கு வஸ்திரம் தானம் செய்து வீட்டிற்கு ஏற்கனவே அணிவித்த வஸ்திரத்தை எடுத்துவாருங்கள். உங்கள் தனம் மேம்படும்.

தாந்தீரிகப் பரிகாரம்: சூரியனை நமஸ்காரம் செய்து, மஞ்சள் நிற ஆடைகளை உடுத்துங்கள் அல்லது மஞ்சள் நிற துண்டு ரிப்பன்களை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

ரிஷப ராசிக்காரர்கள்: வெங்கடேசப் பெருமாளை வியாழன் தோறும் வழிபாடு செய்யுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் திருப்பதி வெங்கடேசப் பெருமாளையும் தரிசனம் செய்யலாம். நீங்கள் வழிபடும் கோயிலில் சித்தர்கள் சமாதி இருந்தால் சித்தர்களையும் வழிபட வேண்டும்.

தாந்தீரிகப் பரிகாரம்: பாசிபயறு தானியங்களை பாக்கெட்டில் வைத்துக் கொள்வதும் பல வண்ணங்கள் கொண்ட ஒரு துணியைத் துண்டு துண்டாக வெட்டி விடுவது நன்மை பயக்கும்.

மிதுன ராசிக்காரர்கள்: தையல்நாயகி அம்மனை வழிபடுவது சிறப்பான நற்பலன்கள் தரும். குறிப்பாக அம்பாளை திங்கட்கிழமை தோறும் மாலை நேரத்தில் வழிபாடு செய்து. இவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும் மேலும், அங்கு பால் கொண்டு செய்யப்படும் நெய்வேத்தியத்தை படைத்து கோயிலில் உள்ள பக்தர்களுக்கு கொடுங்கள்.

தாந்தீரிகப் பரிகாரம்: உடை அணியும் பொழுது எப்பொழுதும் வெண்மைநிற உடையை அதிகமாகப் பயன்படுத்துங்கள். நீலவண்ண ரிப்பன் துண்டை அரை அடி எடுத்து ஒவ்வொரு சனிக்கிழமை அன்று துண்டு துண்டாக வெட்டி குப்பையில் போடுங்கள்.

கடக ராசிக்காரர்கள்: வைத்தீஸ்வரன் கோயில் சென்று வைத்தியநாத சுவாமி சமேத தையல்நாயகி அம்பாளை வழிபடுங்கள். எள் அல்லது கொள் சேர்த்து நெய்வேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு விநியோகம் செய்து அங்கு அம்பாளின் பாதத்தில் கத்தாழை வைத்து எடுத்து வந்து வீட்டில் பதியமிடுங்கள். மனம் பேதலித்தவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

தாந்தீரிகப் பரிகாரம்: கத்தாழை செடியை வாங்கி குறைந்தது 2 பேருக்கு அதிகபட்சம் 15 பேருக்கு தானம் கொடுங்கள் உங்கள் பொருளாதார சிக்கல் தீர்வுக்கு வரும்.

சிம்மம் ராசிக்காரர்கள்: ஒவ்வொரு புதன் கிழமை தோறும் நீங்கள் சாயிபாபா கோயிலுக்கு சென்று வாருங்கள். பாபாவிற்கு இனிப்பான பொருட்களை நெய்வேத்தியம் செய்து விநியோகம் வாருங்கள். உங்கள் பொருளாதாரம் மேம்படும். வீட்டில மனைவியுடன் ஏதேனும் சச்சரவுகள் இருப்பின் பொறுமையை கைகொள்ளுங்கள்.

தாந்தீரிகப் பரிகாரம்: அருகம்புல் சாறு அருந்துங்கள் முடிந்தால் பலருக்கும் தானம் செய்யுங்கள் இதனை மாலை வேளையில் செய்வது சிறப்பை தரும்.

கன்னி ராசிக்காரர்கள்: மலைமேல் உள்ள சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இனிப்பான நெய்வேத்தியம் படைத்து தானம் செய்யுங்கள். முடிந்தால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் கொடுத்து பழைய வஸ்திரங்களை அர்ச்சகரிடம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் பொருளாதார தொடர்பான முயற்சிகள் முன்னேற்றத்திற்கு வரும்.

தாந்தீரிகப் பரிகாரம்: பிங்க வண்ண உடைகளையோ அல்லது துணிகளையோ 7 பேருக்கு தானமாக கொடுங்கள். உங்கள் பொருளாதார சிக்கல்கள் மேம்படும்.

துலாம் ராசிக்காரர்கள்: நீங்கள் நீர் நிலைக்கு அருகில் உள்ள அல்லது குளம் அமையப் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்று இனிப்பான நெய்வேத்தியம் படைத்து அங்கே வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுங்கள். நீங்கள் சாப்பிடக்கூடாது என்பதுதான் விதிமுறை.

தாந்தீரிகப் பரிகாரம்: மஞ்சள்நிற துணியையும் நீலநிற துணியையும் குறைந்தது 5 பேருக்கு அதிபட்சம் 11 பேருக்கும் தானம் செய்து விடுங்கள் உங்கள் பொருளாதாரத் தடைகள் நீங்கி நிலைமை மேம்பட்டு தன வரவிற்கான வழிகள் உண்டாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்கள்: வியாழன் தோறும் விநாயகர் வழிபாடு செய்து பின்பு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்யுங்கள் கொண்டைக்கடலை நெய்வேத்தியம் செய்து அதனை கோயிலிலுள்ள பக்தர்களுக்கு தானம் செய்துவிடுங்கள். நீங்கள் கண்டிப்பாக நெய்வேத்தியத்தை சாப்பிடக்கூடாது.

தாந்தீரிகப் பரிகாரம்: மஞ்சள் நிற துணியையோ அல்லது உடையையோ குறைந்தது 4 பேருக்கு அதிபட்சம் 10 பேருக்கு தானம் செய்து விடுங்கள் தனவிருத்தி உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்கள்: ஒவ்வொரு சனிக் கிழமையும், அரசமரத்தடியில் உள்ள விநாயகரை வழிபாடு செய்து, பின்பு அங்குள்ள சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, தயிர்சாதம் தானமாக வழங்கவும். பொருளாதாரம் மேம்படும்.

தாந்தீரிக பரிகாரங்கள்: சனிக்கிழமையில் வன்னி மரக்கன்றை தானாமாக வழங்கலாம் அல்லது ஏதேனும் மரக்கன்றை நீங்களே வனப்பகுதிகளில் நட்டு வைக்கலாம். உங்களின் பொருளாதாரத் தடைகள் விலகும்.

மகரம் ராசிக்காரர்கள்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஈஸ்வரனையும் சனிஈஸ்வர பகவானையும் வழிபடுவது சிறப்பாகும். தயிர் சாதம் நெய்வேத்தியம் செய்து கோயிலுக்கு வரும் அனைவருக்கும் தானம் செய்யுங்கள். உங்கள் பொருளாதாரத் தடைகள் நீங்கும். தடைப்பட்ட பொருளாதாரம் சீராகும்.

தாந்தீரிகப் பரிகாரம்: நீல உடையையோ அல்லது துணியையோ குறைந்த பட்சம் 8 பேருக்கு தானம் செய்யுங்கள். 8 இரும்பு வளையங்களை (கீ செயின்) வாங்கி பரிசளித்து விடுங்கள்.

கும்பம் ராசிக்காரர்கள்: ஒவ்வொரு வியாழக் கிழமை தோறும் காளிக்கோயிலுக்கு சென்று முதலில் விநாயகருக்கு தோப்புக்கரணமிட்டு அறுகம்புல் கொடுத்து வழிபடுங்கள். பின்பு காளியம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து அதனை அங்குள்ளவர்களுக்கு வாழை இலையில் வைத்து விநியோகம் செய்துவிடுங்கள்.

தாந்தீரிகப் பரிகாரம்: வெள்ளை யில் கரும்புள்ளி உள்ள உடையையோ அல்லது துணியையோ குறைந்தது 4பேருக்கு அதிபட்சம் உங்களால் முடிந்தளவு தானமாக கொடுங்கள். பொருளாதாரம் விரிவடைவதற்கான வாய்ப்புகளை தரும்.

மீன ராசிக்காரர்கள்: கோவையிலுள்ள மாசாணியம்மன் கோயிலுக்கோ அல்லது மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று சாம்பார் சாதம் நெய்வேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு தானம் செய்து பிரகாரத்திலுள்ள சிவபெருமானுக்கும் அர்ச்சனை செய்து வாருங்கள்.

தாந்தீரிகப் பரிகாரம்: குறைந்த பட்சம் 8 பேருக்கும் அதிகபட்சம் முடிந்தவரை அனைவருக்கும் காலணியை (செருப்பு) தானம் செய்யுங்கள். உங்களுக்கு பொருளாதார தடைகள் விலகும். தூக்கம் இல்லாத நபர்களுக்கு தூக்கம் உண்டாகி மேன்மைகள் உண்டாகும்.

குறிப்பு: தாந்தீரிகப் பரிகாரங்கள் யாவும் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் உரித்தானது.

The post அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம் appeared first on Dinakaran.

Related Stories: