டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஜூன் 5ல் வெளியே வருவேன்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைத்தால் ஜூன் 5ல் சிறையில் இருந்து வெளியே வருவேன் என முதல்வர் கெஜ்ரிவால் உறுதி தெரிவித்தார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அதன் பின்னர் உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. வரும் ஜூன் 2ம் தேதி சரணடைய அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள கெஜ்ரிவால் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் கூட்டத்தில் கெஜ்ரிவால் நேற்று பேசுகையில்,‘‘ சிறையில் என்னை துன்புறுத்துவதற்கு, முயற்சிகள் நடந்தன.நான் கைதானவுடன் கட்சியை உடைக்க பாஜ முயற்சித்தது. ஆனால், பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகாமல் தொடர்ந்து கட்சி பணியை ஆற்றும் எம்எல்ஏக்கள்,கவுன்சிலர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன்.வரும் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்வேன். அங்கு இருந்து தேர்தல் முடிவுகளை பார்ப்பேன். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஜூன் 5ல் சிறையில் இருந்து வெளியே வருவேன்’’ என்றார்.

* சிசிடிவி கேமராக்களை பிரதமர் மோடி கண்காணிக்கிறார்
கெஜ்ரிவால் மேலும் பேசுகையில், சிறையில் என்னுடைய அறையில் 2 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அவற்றை சிறை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பிரதமரின் அலுவலகத்துக்கும் அனுப்புகின்றனர். மோடியும் அதையெல்லாம் பார்க்கிறார். மோடிக்கு என் மீது ஏன் இந்த கோபம் என புரியவில்லை என்றார்.

The post டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஜூன் 5ல் வெளியே வருவேன் appeared first on Dinakaran.

Related Stories: