‘ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்’; நான் ஒண்ணும் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரல.! அமைச்சர் ரோஜா ஆவேசம்

திருமலை: ஆந்திராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் நேற்று தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து அமைச்சர் ரோஜா பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நகரி தொகுதியில் பிரசாரத்திற்கு செல்வது போன்ற உணர்வு இல்லாமல் வெற்றி யாத்திரைக்கு சென்றதுபோல் உள்ளது. மக்கள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். எனவே கட்டாயம் வெற்றி பெறுவோம். பணம் சம்பாதிப்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். அது முற்றிலும் தவறு. சம்பாதிப்பது எங்கள் நோக்கம் அல்ல.

அதற்காக அரசியலுக்கு வரவில்லை. சம்பாதிக்க வேண்டும் என விரும்பியிருந்தால் நானும் எனது கணவர் ஆர்.கே.செல்வமணியும் சினிமா துறையில் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம். மக்களுக்காக உழைக்கவே அரசியலை தேர்வு செய்து பணியாற்றி வருகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ், தெலுங்குதேசம் என மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் அப்போது இல்லாத வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. எனவே நான் போட்டியிடும் நகரி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறுவதோடு எதிர்க்கட்சி தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடுவையும் தோற்கடித்து 175 இடங்களிலும் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ஆட்சியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்’; நான் ஒண்ணும் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரல.! அமைச்சர் ரோஜா ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: