முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜவுடன் கூட்டு; சந்திரபாபு நாயுடுவுக்கு வெட்கமில்லை.! ஜெகன்மோகன் தாக்கு

திருமலை: ஆந்திராவில் நேற்று மாலை புத்தூரில் நடந்த ரோட்ஷோவில், நகரி தொகுதி எம்எல்ஏ வேட்பாளர் ரோஜா, சித்தூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ரெட்டப்பா ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஜெகன்மோகன் பேசுகையில், ‘‘வரும் திங்கட்கிழமை நடக்க உள்ள தேர்தல் வெறும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கான தேர்தலாக மட்டும் நினைக்கக்கூடாது. அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் வீட்டில் அமைய உள்ள வளர்ச்சி மற்றும் திட்டங்கள் தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் தேர்தலாக நினைக்கவேண்டும்’’ என்றார்.

இதேபோல் கடப்பாவு தொகுதியில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: சந்திரபாபு காலையில் பாஜகவுடனும், இரவில் காங்கிரசுடனும் கூட்டு வைத்துக்கொண்டு என்னை தோற்கடிக்க நினைக்கிறார். இதற்காகவே எனது குடும்பத்தில் உள்ளவர்களை என்னிடம் இருந்து பிரித்து காங்கிரஸில் நிற்க வைத்துள்ளார். என் தந்தை ராஜசேகரரெட்டி இறந்த பிறகு அவரது பெயரை கூட சிபிஐ வழக்கில் உள்ளீடு செய்துள்ளனர். இதுபோன்று ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்திரபாபு 2 கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கிறார்.

பாஜக இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் எனக்கூறி வரும் நிலையில, பாஜகவுடன் இணைந்து ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது இஸ்லாமியர்களிடம் ஓட்டுகேட்க வெட்கம் இன்றி சந்திரபாபு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில் இன்று காலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் ஜெகன்மோகன் வெளியிட்ட பதிவில், ‘ஆலோசித்து வாக்களியுங்கள், விஷன் ஆந்திராவை கருத்தில் கொண்டு வாக்களிக்கவேண்டும்’ என பதிவு செய்துள்ளார்.

The post முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜவுடன் கூட்டு; சந்திரபாபு நாயுடுவுக்கு வெட்கமில்லை.! ஜெகன்மோகன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: