நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையில் திருப்பம்: தோட்டத்தின் கிணற்றில் கத்தி மீட்பு

நெல்லை: நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையில் திடீர் திருப்பமாக தோட்டத்தின் கிணற்றில் கத்தி மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60). கடந்த 2ம்தேதி மாயமான இவரை, 4ம் தேதியன்று போலீசார் அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்டனர். மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட 10 தனிப்படைகள், ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஜெயக்குமார் மகன்கள், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.  இந்நிலையில், ஜெயக்குமாரின் வீட்டருகே 2 லிட்டர் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதனை போலீசார் மீட்டு நடத்திய விசாரணையில் அந்த பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து கொலையாளிகள் ஜெயக்குமார் உடலை எரித்து இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதையடுத்து அந்த பாட்டிலில் உள்ள கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளிகள் ஜெயக்குமார் வீட்டருகே உள்ள பெட்ரோல் பங்கில் தான் பெட்ரோல் வாங்கியிருக்க வேண்டும் என்பதால் அங்குள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சென்று 2ம்தேதி இரவு பாட்டிலில் பெட்ேரால் வாங்கியவர்கள் யார் யார்? என்று விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜெயக்குமாரின் 2 செல்போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த 2 செல்போன்களும் அவர்கள் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் ஜெயக்குமார் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சுமார் 25 அடி ஆழத்திற்கு இருந்த தண்ணீரை போலீசார் ராட்சத மோட்டார் மூலம் வெளியே இறைத்தனர். இந்த பணி சுமார் 6 மணி நேரம் நடந்தது. தண்ணீர் வற்றிய பிறகு கிணற்றிற்குள் ஒரு சிறிய துருப்பிடித்த கத்தி ஒன்று மட்டும் கிடந்துள்ளது.

இதனை போலீசார் மீட்டுள்ளனர். இதுகுறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இறந்த ஜெயக்குமாரின் போன்களுக்கு வந்த மொத்த கால் லிஸ்ட்களையும் போலீசார் எடுத்து ஆய்வு செய்தனர். இதில் 2ம்தேதியன்று அவர் யார் அழைத்தும் வீட்டில் இருந்து வெளியே செல்லவில்லை. தானாகவேதான் வெளியே சென்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் அந்த கால்களின் அடிப்படையில் ஜெயக்குமாரை அதிகமுறை தொடர்பு கொண்ட ஒரு பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரும் கடந்த 2ம்தேதிக்கு பின்னர் அவரை பார்க்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்றுதான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீசாருக்கு நாளை (12ம் தேதி)க்குள் வழக்கில் வலுவான ஆதாரங்களை திரட்டி, வழக்கினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இல்லை எனில் வழக்கை வேறு விசாரணை முகமைக்கு மாற்றவும் உயரதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

மதுரை, திண்டுக்கல்லில் இருந்து கூடுதல் தடயவியல் குழு ஆய்வு
ஜெயக்குமார் இறந்து கிடந்த தோட்டத்தில் நெல்லை மாவட்ட தடயவியல் பிரிவு உதவி இயக்குநர் ஆனந்தி தலைமையில் ஏற்கனவே இருமுறை போலீசார் ஆய்வு செய்துள்ள நிலையில் தற்போது மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்தும் கூடுதலாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதிய கோணத்தில் தோட்டத்திலும், ஜெயக்குமார் கார் மற்றும் வீட்டில் சோதனை நடத்துவர் என்றும் இதில் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது புதிய தடயங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையில் திருப்பம்: தோட்டத்தின் கிணற்றில் கத்தி மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: