சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்: மன்னிப்பு கேட்டு வீடியோ

சென்னை: பைக் வீலிங் செய்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்யும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் பைக் சாகசம் செய்து அதனை சமூகவலைதளத்தில் பதிவிடும் மோகம் இளைஞர்கள் மத்தியில் குறையவே இல்லை. அவ்வகையில் தற்போது பெரம்பூர் செங்கை சிவம் மேம்பாலம் பகுதியில் பைக் வீலிங் செய்து சமூக வலைதளத்தில் வீடியோவை இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரே பைக்கில் 2 இளைஞர்கள் ஆபத்தான முறையில் சாலையில் வீலிங் செய்தபடி ஓட்டுவதும், அதனை மற்றொரு பைக்கில் செல்லும் நண்பர்கள் வீடியோ பதிவு செய்வதும் பதிவாகி உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலான நிலையில் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வீடியோவை வெளியிட்டவர், புளியந்தோப்பு காந்திநகர் 5வது தெருவை சேர்ந்த சக்தி (எ) குபேரன் (18) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே கத்தியை வைத்து ஒரு வீடியோவை பதிவு செய்து அதை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். அப்போதே பேசின் பிரிட்ஜ் போலீசார் அவரைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் அவருக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். பைக் சாகசம் செய்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், யாரும் பைக் சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் குபேரன் பேசிய வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்திலேயே போலீசார் பதிவிட வைத்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The post சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்: மன்னிப்பு கேட்டு வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: