பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பவானி, மே 9: பவானி அருகே மயிலம்பாடியில் கரியகாளியம்மன், மகா மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா மற்றும் பொங்கல் திருவிழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23-ம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து, 25-ம் தேதி மகா மாரியம்மனுக்கு கம்பம் போடுதல் நடைபெற்றது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் மே மாதம் 4-ம் தேதி அம்மனுக்கு சந்தை தாண்டி பூவோடு வைத்தல், 6-ம் தேதி வீர மக்களை அழைத்தல் மற்றும் பச்சை பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சக்தி அழைத்தல், கருமலை ஆண்டவர் அழைத்து வருதல், குண்டம் திறப்பு மற்றும் கோயில் முன்பாக விறகுகளை அடுக்கி குண்டத்தில் தீ மூட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்காக கோயில் முன்பாக 75 அடி நீளத்திற்கு குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்திலிருந்து தீப்பிழம்புகள் நேற்று காலை தட்டி சமன்படுத்தப்பட்டு, முப்போடு, படைக்கலம் அழைத்தல், குதிரை துலுக்கு பிடித்தல், செலம்பூர் அம்மன் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் கோயில் பூசாரி குண்டத்தில் இறங்க அடுத்தடுத்து பக்தர்கள் வரிசையாக குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ப.நந்தினீஸ்வரி மற்றும் மிராசுதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

முன்னதாக, கோயில் வளாகத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் திறந்து வைத்து, பக்தர்களுக்கு நீர்மோர், பழத்துண்டுகளை வழங்கினார். மயிலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம், கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு இன்று நடைபெறுகிறது.
பவானி போலீசார், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: