கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், நந்தவனம் நகர் 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் காஜா முகைதீன் (43). அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் பணம் கொடுத்தால் தங்களது பெயரில் வாகனத்தை இயக்கி, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, நிறைய பேரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு பணம் பெற்ற பிறகு, ஒருவருக்கும் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், காஜா முகைதீன் மீது புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், காஜா மொய்தீன் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி கேரளா சென்றுவிட்டார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்து அழைத்து வந்த நிலையில், பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் மீண்டும் காஜாமுகைதீனிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்கத் தொடங்கினர். இதனால், செய்வதறியாது தவித்த காஜா முகைதீன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். நீண்ட நேரம் ஆகியும் அறைக்குள் சென்ற காஜா முகைதீன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரது பெயரை சொல்லி அழைத்துப் பார்த்தனர். சத்தம் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு காஜா முகைதீன் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த டிராவல்ஸ் அதிபர் காஜா முகைதீன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: