பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

 

திருப்போரூர், மே 6: தினகரன் செய்தி எதிரொலியால், திருப்போரூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நான்கு மாடவீதிகள், சான்றோர் வீதி, கச்சேரிசந்து தெரு, திருவஞ்சாவடி தெரு, வணிகர் வீதி, கந்தசுவாமி கோயில், பிரணவ மலைக்கோயில், பதிவு அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

இந்த குரங்குகள் பொதுமக்கள் எடுத்துச்செல்லும் பழம், அரிசி பொரி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை பிடுங்கி சாப்பிடுவதால் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் கடந்த 29ம்தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மற்றும் நான்கு மாடவீதிகளில் அதிகமான குரங்குகள் உலவுவதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, நேற்று ஒரே நாளில் மட்டும் 9 குரங்குகள் பிடிக்கப்பட்டன. இவ்வாறு பிடிக்கப்பட்ட குரங்குகள் மடையத்தூர் வனப்பகுதியில் விடப்பட்டன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள குரங்குகளை பிடிக்கும் பணிகள் தொடரும் என திருப்போரூர் வனச்சரக அலுவலர் பொன்செந்தில் தெரிவித்தார்.

The post பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: