டிவி, ஆடல் பாடல், செல்போன் மோகம் அதிகரிப்பு அழிவின் விளிம்பில் மேடை நாடக கலை வருமானம் இன்றி கண்ணீரில் தத்தளிப்பு

திருமயம், மே 5: டிவி நிகழ்ச்சிகள், ஆடல்பாடல் நடனங்கள், மொபைல் போன் மோகத்தால் மேடை நாடக கலைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியானது, பார்வையாளர்கள் இல்லாத மேடையில் நடிப்பதற்கு வேதனையாக உள்ளதாக மேடை நாடக கலைஞர்கள் வேதனை தொரிவித்தனர்.

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கோயில்கள் இருந்தாலும் கல் உருவம் கொண்ட கடவுளுக்கு உயிர் உருவம் கொடுத்து கடவுள் உருவான கதைகளை பாமர மக்களும் அறியும் வகையில் பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் சென்ற பெருமை மேடை நாடகத்திற்கும், அதில் நடிக்கும் கலைஞர்களுக்கு மட்டுமே சேரும். அரசர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, குடும்ப பிரச்னைகளை தெளிவுபடுத்த, நகைச்சுவை உணர்வை வளர்க்க, புரட்சியாளர்கள் தங்களின் கருத்துகளை மக்களிடம் சென்று சேர்க்க மேடை நாடகங்களை பயன்படுத்தி வந்தனர்.

இன்றளவும் மேடை நாடகங்களை மையமாக கொண்டே பல்வேறு அரசர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், நடிகர்கள் அறியப்படுகின்றனர். இதனிடையே நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நாடக தலைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதோடு விழாவுக்கு வரும் விருந்தினர்கள், பொதுமக்களை மகிழ்விக்க மேடை நாடகங்கள் அதிகளவு நடைபெற தொடங்கியது.

இதனால் நாடக கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு கலைஞர்களுக்கு பயிற்சி கொடுக்க கலைகூடங்கள் அதிகரித்தன. இதனை தொடர்ந்து டிவி, தியேட்டர்கள் வந்தாலும் மேடை நாடகங்களின் மவுசு குறையவில்லை. காரணம் டிவி நிகழ்ச்சிகள், திரை படங்களில் நடிக்க மேடை நாடக கலைஞர்களே அதிகளவு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் மேடை நாடகம் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூடாரமாக மாறியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களுக்கென ஒரு கோயில் அமைத்து அதில் திருவிழா நடத்த தொடங்கினர். இதனால் திருவிழாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. திருவிழாக்களில் புராண, புரட்சி, விழிப்புணர்வு நாடகங்கள் அதிகளவு நடைபெற்றதால் நாடகங்களின் வளர்ச்சியும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றது. நாடகம் இரவு 10 மணிக்கு தொடங்கி விடியும் வரை நடைபெறும்.

இரவு முழுதும் நாடகம் நடந்தாலும் ரசிகர்கள் சிறிதும் சோர்வடையாமல் கலைஞர்களின் நடிப்பை ஊக்குவிக்கும் வகையில் விசில் அடித்து, கை தட்டி ஆராவாரம் செய்வர். இது கலைஞர்களுக்கு உற்சாகமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு நல்ல குரல் வளம், சரளமான, தெளிவான பேச்சு, விவாதிக்கும் தன்மை இருந்தால் தான் நாடகத்தில் நிலைத்து நிற்க முடியும். இது போன்ற திறமைகளை கொண்ட கலைஞர்களை ரசிர்கர்கள் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் தக்க சன்மானம் கொடுக்கவும் தவறியதில்லை.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அறிவியளின் அதீத வளர்ச்சியால் டிவி, மொபைல் போன்கள், தியேட்டர்கள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. இதனால் கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் டிவி சென்றடைந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் சென்று சேர்க்க பல்வேறு நாடகங்களை தயாரித்து டிவி-யில் ஒளிபரப்ப தொடங்கினர்.

இதில் ஒளிபரப்பபடும் புராண நாடகங்களில் தோன்றும் கடவுள் மேஜிக் செய்வது போலவும், மாய உலக கற்பனையை நிஜமாக படம் பிடித்து காட்டியதால் டிவி நிகழ்ச்சிகள் அனைவரையும் ஈர்த்தது. இதனால் படங்கள், நாடகங்களை மக்கள் வீட்டில் இருந்த படியே பார்க்க தொடங்கினர்.

மேலும் திருவிழாக்களில் புராண நாடகத்திற்கு பதிலாக புரொஜெக்டர் உதவியுடன் திரைபடம், ஆர்க்கெஸ்ட்ரா உள்ளிட்ட கச்சேரிகள் நடைபெற தொடங்கியது. இதனால் புராண நாடகங்கள் நடத்துவது குறைந்தது. அப்படியே நடந்தாலும் ரசிகர்கள் குறைவான அளவே வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை பகுதிகளில் ஆடல்பாடல் எனும் அரைகுறை ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் தூக்கி விழுங்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சியில் அதிகளவு ஆபாச நடனங்கள் இருப்பதால் இதனை காண இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு கூடுவதை காண முடிகிறது. இதுவே ஒரு புராண மேடை நாடகம் என்றால் 100 பேர் கூடுவதே சிரமமாக உள்ளது. அவர்களும் கடைசி வரை இருப்பதில்லை.

இதற்கு தொழிற்நுட்ப வளர்ச்சி, மேற்கத்திய பழக்க வழக்கங்கள், ஆபாச நடனங்களே காரணம் என நாடக கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போதாக்குறைக்கு மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் மேடை நாடகம் என்பது அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக உள்ளது.

The post டிவி, ஆடல் பாடல், செல்போன் மோகம் அதிகரிப்பு அழிவின் விளிம்பில் மேடை நாடக கலை வருமானம் இன்றி கண்ணீரில் தத்தளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: