ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி


* நூற்றுக்கணக்கான பெண்களுக்கு அநீதி இழைத்தவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது ஏன்?
* பாலியல் குற்றவாளி எளிதாக வெளிநாடு தப்பிச் சென்றது எப்படி?

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் சிக்கியது குறித்து பிரதமர் மோடி கருத்து கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வலுக்கு மோடி பிரசாரம் செய்தது ஏன்? பாலியல் குற்றவாளியான அவர் வெளிநாடு தப்பிச் சென்றது எப்படி? என்று அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் கேட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன் ஆவார். இவர் தற்போது ஹாசன் தொகுதியில் பாஜ-மஜத கூட்டணி வேட்பாளராக களம் கண்டுள்ளார். இத்தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்தது.

வாக்குப்பதிவு சமயத்தில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மஜத ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மொத்தம் 3000 ஆபாச வீடியோக்கள் கொண்ட பென்டிரைவை பாஜ மூத்த தலைவர் தேவராஜ் கவுடாவிடம் வழங்கியதாக பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் தெரிவித்தார். அந்த பென்டிரைவில் இருந்த வீடியோக்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது. எனவே கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளத்தை அழிக்க பாஜவே அந்த வீடியோக்களை வெளியிட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரஜ்வல்லின் பாலியல் பலாத்கார வீடியோக்கள் குறித்த தகவல் பாஜ தலைமைக்கு 3 மாதத்துக்கு முன்பே தெரிந்திருந்தும், கடந்த மாதம் பிரஜ்வல்லை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,’ கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து எப்போதும் போல் நரேந்திர மோடி வெட்கக்கேடான மவுனம் காத்து வருகிறார். இந்த கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்:

* எல்லாம் தெரிந்திருந்தும் வெறும் வாக்குக்காக நூற்றுக்கணக்கான பெண் பெண்களை வன்கொடுமை செய்த பிசாசை ஏன் ஊக்குவித்தார்?
* இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி இவ்வளவு எளிதாக நாட்டை விட்டு தப்பினார்?
* கைசர்கஞ்ச் முதல் கர்நாடகா வரையிலும், உன்னாவ் முதல் உத்தரகாண்ட் வரையிலும், மகள்களின் குற்றவாளிகளுக்கு பிரதமர் மோடி மவுனமாக ஆதரவளிப்பது நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை உற்சாகப்படுத்துகிறது.
* மோடியின் ‘அரசியல் குடும்பத்தில்’ அங்கம் வகிப்பது குற்றவாளிகளுக்கு ‘பாதுகாப்பு உத்தரவாதமா’? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரஜ்வலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: மோடிக்கு சித்தராமையா கடிதம்
பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்தில், ‘எம்.பியும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் செயல்பாடு வெட்கக்கேடானது மட்டுமல்லாது, இந்த பாலியல் வழக்கு நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. எஸ்.ஐ.டி இந்த வழக்கை மிகத்தீவிரமாக விசாரித்துவரும் நிலையில், வெளிநாட்டில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வருவது மிக முக்கியம். பிரஜ்வல் ரேவண்ணா அவரது ராஜாந்திர (டிப்ளோமேடிக்) பாஸ்போர்ட்டை வைத்துத்தான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். எனவே இந்த வழக்கில் பிரஜ்வலிடம் எஸ்.ஐ.டி விரிவான விசாரணையை மேற்கொள்ள, அவரை இந்தியாவிற்கு அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது ராஜாந்திர பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்’ என்று சித்தராமையா கடிதத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வாரம் அவகாசம் வேண்டும்: மவுனம் கலைத்தார் பிரஜ்வல்
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவும் அவரது தந்தை ரேவண்ணாவும் 24 மணி நேரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எஸ்.ஐ.டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வழியாக மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக டிவீட் செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா, நான் பெங்களூருவில் இல்லை. எனவே விசாரணைக்கு ஆஜராக முடியாது என்பதால், எனது வழக்கறிஞர் மூலமாக பெங்களூரு சிஐடி போலீசாரிடம் அவகாசம் கேட்டிருக்கிறேன். உண்மை விரைவில் வெல்லும் என்று பிரஜ்வல் டிவிட் செய்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர் ஒரு வாரம் அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷாவுக்கு பதிலடி
வீடியோ விவகாரம் குறித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிவருகிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இதுவரை ஏன் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜ அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. இதில் மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அமித் ஷாவின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசியுள்ள மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ‘ ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அது சரியல்ல. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வழக்கு பலபேர் வாழ்க்கை தொடர்பானது. எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: