திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: கேட் மக்கர் செய்வதை எளிதாக்க நவீன வசதி

திருச்சி: ரயில்வே கேட் அடிக்கடி மக்கர் செய்வதை எளிதாக்க திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ என்ற புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் தெற்கு ரயில்வே மண்டலத்தின் 6 ரயில்வே கோட்டங்களில் 2வது பெரிய கோட்டமாக இருப்பது திருச்சி ரயில்வே கோட்டம். இது டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை இணைக்கும் மத்திய கோட்டமாக செயல்பட்டு வருகிறது. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், திருவாரூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால், புதுச்சேரி என 1050 கிமீ தூரத்தை இணைக்க கூடியதாக இருக்கிறது திருச்சி ரயில்வே கோட்டம்.

இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட நிலை மாறி கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த கோட்டத்தில் இருந்து வௌிமாவட்டங்கள் மட்டுமல்ல, வௌி மாநிலத்திற்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கேட்கீப்பர்களுடன் கூடிய 496 ரயில்வே கிராசிங்குகள் உள்ளது. இந்த ரயில்வே கிராசிங்கை கடக்க தற்போது ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ என்ற புதிய தொழில்நுட்பம் முறை ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இண்டர் லாக் கேட் சிஸ்டம்’ செயல்பாட்டில் உள்ளதால் ரயில்வே கிராசிங்கில் உள்ள கேட்கீப்பர் அறைக்கு அருகிலேயே இந்த ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ பெட்டியை பொருத்தினால் கேட்டை ஏற்றி இறக்க எளிதாக இருக்கும். ஒருவேளை இந்த கேட்டில் உள்ள கம்பம் உடைந்தாலும், அதற்குள் ஒரு இரும்பு கம்பியும் இணைக்கப்பட்டுள்ளது. அது கேட்டை மூடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ‘208 எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ அமைக்க அனுமதி கேட்டும், நிதி ஒதுக்கீடும் செய்ய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளோம். விரைவில் இந்த எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர் கேட்கீப்பர்கள் உள்ள அனைத்து ரயில்வே கிராசிங்குகளிலும் பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்’ என்றார்.

* சிசிடிவி கேமரா
ரயில்வே கேட்டில் தற்போது கேட்கீப்பர்கள் முறையாக செயல்பாட்டில் உள்ளனரா? என்பதை கண்காணிக்க அனைத்து கேட்கீப்பர் அறையை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில் அதிக வேகத்தில் வந்து சென்றாலும் துல்லியமாக கண்காணிக்கும். மேலும், கேட்கீப்பர்களுக்கு தேவையின்றி சிரமம் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் இந்த கேமரா பதிவு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: கேட் மக்கர் செய்வதை எளிதாக்க நவீன வசதி appeared first on Dinakaran.

Related Stories: