இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் குறைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதைஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கண்ட நாள்களில் 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதையடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கைக் கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(40கிமீ-50கிமீ வேகத்தில்) மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 20ம் தேதி வரையில் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

குறிப்பாக 16, 17ம் தேதிகளில் மஞ்சள் அலர்ட்டும், 18, 19ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நாள்களில் அதிக அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரஞ்சு அலர்ட்டைப் பொருத்தவரையில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கியதால் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக தேனி, விருதுநகர், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. இது தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 80 மிமீ மழை பெய்துள்ளது.

இதற்கிடையே, தமிழகம், புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று குறைவாகவும் வெப்ப நிலை இருந்தது. அதிகபட்சமாக வேலூர், ஈரோடு, கரூர், திருத்தணி பகுதிகளில் நேற்று 102 டிகிரி வெயில் இருந்தது. நாமக்கல் 100 டிகிரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருப்பத்தூர், மதுரை 99 டிகிரி, தர்மபுரி, கோவை, சென்னை 97 டிகிரி வெயில் இருந்தது. பிற பகுதிகளில் 95 டிகிரிக்கும் குறைவாக வெயில் இருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 19ம் தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளது.

அரசு உத்தரவு: ஐந்து நாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இணை இயக்குனர் முத்துக்குமரன் நேற்று தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘‘தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 20ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

* தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
* இதனால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* இதையொட்டி 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (40கிமீ-50கிமீ வேகத்தில்) மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: