செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு விண்ணப்பம்; முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் சர்வர் வேகம் குறைந்தது. முறையான ஆவணங்கள் இல்லாததால் 3500 விண்ணப்பங்களை அதிகாரிகள் நிராகரித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

வீடுகளில் செல்லமாக வளர்க்கக்கூடிய வளர்ப்பு நாய்கள் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. பல ஆயிரங்கள் கொடுத்து வித விதமான ரக நாய்களை மக்கள் வளர்த்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தாலும் தாங்கள் படுக்கும் அறையிலேயே அதையும் வைத்து செல்லமாக வளர்க்கின்றனர்.

அவற்றை வெளியில் அழைத்து வரும் போது மற்றவர்களை எதிரிகளாக நினைத்து தாக்குகிறது. வளர்ப்பு முறையில் பிரச்னை இருக்கும் போது தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக விலங்குகள் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான், ஆயிரம் விளக்கு பூங்கா ஒன்றில் சிறுமியை நாய் கடித்து குதறியதில் அந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவளுக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிறுமியை கடித்த அந்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒருவரின் நாய் ஆகும். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இவற்றை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதற்காக பல்வேறு வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. அவற்றை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரித்துள்ளது. இந்நிலையில் வீடுகளில் நாய், பூனைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், உரிமம் பெறாதவர்களுக்கு ₹1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெறாத பலரும் ஆன்லைன் மூலம் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஒரே வாரத்தில் சென்னையில் 6 ஆயிரத்து 713 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில், இதுவரை 1500 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதத்திற்குள் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக உரிமம் வழங்குவதை இலக்காக நிர்ணயம் செய்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால் சர்வர் செயல்பாடு வேகம் குறைந்தது. இதனால் விண்ணப்பிப்பவர்களுக்கு உரிய நேரத்தில் உரிமம் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அதனை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேநேரம் முறையான ஆவணங்களை பலர் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த விண்ணப்பங்கள நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து சென்ைன மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் இணைய தளத்தின் வேகம் குறைகிறது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. அதை உடனடியாக சரி செய்து விடுவோம். விண்ணப்பித்தவர்களில் 1200 நாய்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. 2500 நாய்களுக்கு உரிமம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. மேலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு விண்ணப்பம்; முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: