புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட முதல்வர் ஜெகன்மோகன் வேட்புமனு தாக்கல்: பொது கூட்டத்தில் சகோதரி ஷர்மிளா மீது காட்டம்

திருமலை: புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட முதல்வர் ஜெகன்மோகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் புலிவெந்துலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் சகோதரி ஷர்மிளாவை தாக்கி பேசினார். ஆந்திர மாநில முதல்வரும் ஒய்.எஸ.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் நேற்று தனது சொந்த தொகுதியான புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

பின்னர் புலிவெந்துலாவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: ஒய்.எஸ்.ஆரையும் என்னையும் களங்கப்படுத்த சந்திரபாபு, பவன்கல்யான் ஆகியோர் முயற்சிக்கின்றனர். சமீப காலமாக ஒய்.எஸ்.ஆரின் வாரிசுகள் என்று சதித்திட்டத்தின் கூட்டத்தில் நின்று கொண்டு கூறுகிறார்கள். ஒய்எஸ்ஆர் குடும்பத்தை குறிவைத்தது யார்? என் தந்தை மீது சதி மற்றும் குற்ற வழக்குகள் போட்டது யார்? அந்த சதிகளை செய்த கட்சியில் இணைந்தவர்கள் ஒய்எஸ்ஆரின் வாரிசுகளா? அந்த மாபெரும் தலைவரின் வாரிசுகள் யார் என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தெலுங்கு தேசம் கட்சியின் சாயத்தை வைத்து கொண்டு அவர்களின் சதியில் அங்கம் வகிப்பவர் ஒய்.எஸ்.ஆரின் வாரிசுகளா? ஒய்.எஸ்.ஆருக்கு எதிராக சதி செய்தவர்கள் எழுதிக் கொடுத்ததை (ஷர்மிளா) படிக்கிறார்.

சித்தப்பா விவேகானந்த ரெட்டியை கொன்றது யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒய்.எஸ்.விவேகாவை நான்தான் கொன்றேன் என்று ஒரு நபர் (சந்திரபாபு) வெளியில் சொல்லி வருகிறார். அவினாஷ் எந்த தவறும் செய்யவில்லை என்று நம்பி அவருக்கு கடப்பா எம்.பி.யாக போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளேன். விவேகானந்தாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவரை கொன்ற குற்றவாளிக்கு யார் ஆதரவு? அவினாஷ் ரெட்டி எழுப்பிய கேள்விகள் நியாயமானது? அவினாஷின் வாழ்க்கையை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக புலிவெந்துலாவிற்கு ஹெலிகாப்டரில் வந்த நிலையில் அங்கு மூன்று மத வழிபாடு செய்து மதகுருக்களிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

The post புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட முதல்வர் ஜெகன்மோகன் வேட்புமனு தாக்கல்: பொது கூட்டத்தில் சகோதரி ஷர்மிளா மீது காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: