பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு கோடை வெயிலுக்கு குடிசை வீடு எரிந்து நாசம்: வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகின

பள்ளிப்பட்டு, ஏப். 25: பள்ளிப்பட்டு அருகே கோடை வெயிலுக்கு குடிசை வீடு தீ பிடித்து வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமானது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில், அனல் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது. இந்நிலையில், கர்லம்பாக்கம் ஊராட்சியில் மலைப் பகுதியில் உள்ள வெங்கடாபுரம் இருளர் காலனியை சேர்ந்த துரைசாமி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் ரமேஷ், திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை துரைசாமி மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளனர்.

மதியம் 1 மணி அளவில் வெயில் தாக்கம் அதிக அளவில் இருந்ததாலும், மலைப் பகுதியில் வீடு இருந்ததால், வெப்பம் அதிகரித்து கூரை வீடு திடீரென்று தீப்பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கூரை வீடு முற்றிலும் எரிந்து, வீட்டிலிருந்த பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், உடைகள் என அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து வந்த பள்ளிப்பட்டு தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் கனேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசின் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். அரசின் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

திமுக சார்பில் உதவி
கூரை வீடு எரிந்து நாசமான தகவல் அறிந்த பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் பி.டி.சந்திரன் நிர்வாகிகளுடன் இருளர் காலனிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி மற்றும் அரிசி, பருப்பு, ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முரளிசேனா, மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் எம்.கே.ராமச்சந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் கோவர்தன் நாயுடு, வரால் நாயுடு, செல்வம், மணி, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி தேவராஜன், கர்லம்பாக்கம் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு கோடை வெயிலுக்கு குடிசை வீடு எரிந்து நாசம்: வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகின appeared first on Dinakaran.

Related Stories: