லாலு மருமகனுக்கு சீட் ஒதுக்கிய நிலையில் அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டி?: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்

லக்னோ: லாலு மருமகனுக்கு கன்னோஜ் தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்கிய நிலையில், அந்த தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதன்படி, அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியிலும், அகிலேஷ் யாதவின் உறவினர்கள் அக்‌ஷய் யாதவ் ஃபிரோசாபாத் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் பதாவுன் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் அசம்கர் தொகுதியிலும், தேஜ் பிரதாப் கன்னோஜ் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கன்னோஜ் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜ் பிரதாப், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ராஜலட்சுமியின் கணவராவார்.

இவர் ஏற்கனவே மெயின்புரி தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இந்த முறை கன்னோஜ் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். அதன்படி அவரது பெயரும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றது. தேஜ் பிரதாப் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், திடீர் திருப்பமாக அவரது வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டது.

கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாகவும், அவர் நாளை (ஏப். 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. கன்னோஜ் தொகுதியில் தேஜ் பிரதாப்புக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அவருக்கு பதிலாக அகிலேஷ் யாதவ் போட்டியிட முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

The post லாலு மருமகனுக்கு சீட் ஒதுக்கிய நிலையில் அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டி?: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: