`சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம் படிக்கிறேன்’ சித்தராமையாவுக்கு இலவச டிக்கெட் மாலை: சட்ட கல்லூரி மாணவியால் நெகிழ்ச்சி

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் முதல்வர் சித்தராமையா அரசு 5 உத்தரவாத திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியது போல், கர்நாடகா அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டமான சக்தி திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செயல்படுத்தப்பட்டது. சக்தி திட்டத்தால் ஏழை, நடுத்தர, பணிக்கு செல்லும் பெண்கள் மிகுந்த பயனடைந்திருக்கின்றனர்.

சக்தி திட்டம் அமலுக்கு வந்தது முதல் 194.39 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் டிக்கெட் மதிப்பு மொத்தமாக ரூ.4,673.56 கோடி ஆகும். இத்திட்டத்தால் பயனடைந்த சட்டக்கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ என்பவர் முதல்வர் சித்தராமையாவிற்கு, இலவச டிக்கெட்டுகளால் தொடுக்கப்பட்ட மாலையை வழங்கி முதல்வரை நெகிழவைத்தார். ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடக்கும் ஹாசன் தொகுதியில் முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் பிரசாரம் செய்தார்.

ஹாசன் மாவட்டம் அரசிகெரெவில் முதல்வர் சித்தராமையா பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சட்டக்கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ டிக்கெட் மாலையை வழங்கினார். முதல்வருக்கு மாலையை கொடுத்து பேசிய அந்த மாணவி, நீங்கள் அமல்படுத்திய சக்தி திட்டத்தால் தான் நான் தினமும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து எனது சட்டப்படிப்பை நல்லவிதமாக படித்துவருகிறேன். எனவேதான் நான் பயணித்த இலவச டிக்கெட்டுகள் அனைத்தையும் பத்திரமாக வைத்து, அதை மாலையாக தொடுத்து வைத்தேன்.

இந்த மாலையை உங்களிடம் வழங்குவதற்கான வாய்ப்புக்காக பல மாதங்கள் காத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் இன்று அரசிகெரெ வருவதை அறிந்ததும், மாலையை எடுத்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன் என்று கூறிய சட்ட கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். கல்லூரி மாணவியின் இந்த செயலால் நெகிழ்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, இது காங்கிரஸ் அரசின் சாதனைகளுக்கு வழங்கப்பட்ட மாலை என்று பெருமிதம் தெரிவித்தார்.

The post `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம் படிக்கிறேன்’ சித்தராமையாவுக்கு இலவச டிக்கெட் மாலை: சட்ட கல்லூரி மாணவியால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: