பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

* ஏப்.30க்குள் புதிய மன்னிப்பை வௌியிட உத்தரவு

புதுடெல்லி: பதஞ்சலி நிறுவன மன்னிப்பு விளம்பரத்தை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டுமா? என பாபா ராம்தேவிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், புதிய மன்னிப்பு விளம்பரத்தை வௌியிட உத்தரவிட்டுள்ளது. நவீன மருந்துகள் தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவியல் பூர்வமான உண்மைகள் அல்லாத தகவல்களை பரப்புவதாக இந்திய மருத்துவ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளோம். சுமார் 64 வெளியீடுகளின் மூலமாக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.10 லட்சம் அளவுக்கு செலவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மன்னிப்பு கூட உங்களது விளம்பரங்களை போன்றே போலியானதாக இருக்கிறது. குறிப்பாக பூதக் கண்ணாடி வைத்தா உங்கள் மன்னிப்பை தேட முடியும். அந்த அளவுக்கு தான் உங்களது தரப்பு மன்னிப்பு விளம்பரம் உள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை உண்மையான விளம்பரத்தின் அளவை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். எனவே செய்தித்தாள் ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் வெளியிட்ட அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. மேலும் ஒரு தவறான விளம்பரத்தின் மூலம் பொதுமக்கள் மீது நாங்கள் எந்தவித தாக்குதலும் நடத்தவில்லை என்று நீங்கள் எங்களிடம் கண்டிப்பாக தெளிவுபடுத்தியே தீர வேண்டும். ஏனெனில் இது பொதுமக்கள் சார்ந்த ஒன்றாகும். உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை சட்டத்தின் ஒரு பகுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உதவிக்காக தேசிய மருத்துவ ஆணையத்தை நாடலாமோ என்று நினைக்கிறோம். குறிப்பாக விலை உயர்ந்த மருந்துகளை பரிந்துரைக்கும் போது, அதன் நிலைப்பாட்டை தவறாக பயன்படுத்த கூடாது. இந்த விவகாரத்தில் தவறான விளம்பரங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஏனெனில் உங்கள் விவகாரத்தில் பல நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தில் புகார் உள்ளது.

மேலும் இதுபோன்று துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று பதஞ்சலி பொய் விளம்பர விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இணைக்கப்படுகிறது. குறிப்பாக மருந்துகள் மற்றும் அழகு சாதன விதிகள் 1945ன் விதி 170 மற்றும் அதுதொடர்பான பரிந்துரையை ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி விளக்க வேண்டும்.

ஏனெனில் பதஞ்சலி வழக்கை பொறுத்தவரை பொதுமக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதை அனுமதிக்க முடியாது. இதில் குழந்தைகளும் அடங்குகிறார்கள் என்பது தான் வேதனையாக உள்ளது. இதில் தவறு எங்கே நடந்துள்ளது என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் நீங்கள் இந்த விவகாரத்தில் சட்ட விதி 170ஐ திரும்பப்பெற முயற்சி செய்கிறீர்கள்.

மேலும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் புதிய மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட வேண்டும். அதேபோன்று ஒன்றிய அரசும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள மன்னிப்பு ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு பாபா ராம்தேவ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மே7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

The post பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: