கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டம்..!!

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை மாவட்டம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும்.

ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையில் ஏழு மலையை கடந்து சென்று, அங்கிருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு சித்ரா பவுர்ணமி நாளை வருகிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்கள் கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த, வனத்துறை திட்டமிட்டுள்ளது. காட்டுத்தீயை தடுக்க சமீபத்தில், ட்ரோன் வாங்கப்பட்டுள்ளது. ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் தீயை அணைக்க, இது பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கவும், அவசர காலங்களில், அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும், ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: