மயிலாப்பூர் வாக்குச்சாவடி எண்-13ல் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: தமிழிசை பேட்டி

சென்னை: மயிலாப்பூர் வாக்குச்சாவடி எண்-13ல் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியை நேற்று சந்தித்து மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 122வது வட்டம், வாக்குச்சாவடி‌ எண் -13ல் மறு வாக்குப்பதிவு நடத்த கோரி புகார் மனு அளித்தார். பிறகு அவர் அளித்த பேட்டி:

ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. வாக்களிப்பது வலிமையானது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பது வலி மிகுந்தது. பல்வேறு பிரச்னை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் தேர்தலை சுமுகமாக நடத்தியதை பாராட்டுகிறேன்.

பல இடங்களில் தேர்தல் ஆணையம் குடும்பத்தையே பிரித்து விட்டது. கணவன்-மனைவி பெயர் வேறு வேறு வாக்குச்சாவடிகளில் இடம் பெற்றுள்ளது. பலரது பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டு விட்டது. வாக்குச்சாவடி எண்-13ல் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* வெள்ளி, திங்கள் வாக்குப்பதிவுகூடாது
இனி வரும் தேர்தல்களில் வெள்ளி, திங்கள் ஆகிய கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக் கூடாது. அப்படி நடந்தால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து விடுமுறையாக நினைத்து விடுகின்றனர். தேர்தலை வாரத்தின் நடுவில் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை போல வைக்க வேண்டும். தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என தமிழிசை கூறினார்.

The post மயிலாப்பூர் வாக்குச்சாவடி எண்-13ல் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: