காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: பிரதமர் மோடி பேச்சு

பாராபங்கி: காங்கிரஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஜூன் 4ம் தேதி வெகு தொலைவில் இல்லை. மோடி அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கப்போகிறது என்பதை இன்று நாடும் உலகமும் அறியும். புதிய அரசில் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக பெரிய முடிவுகளை எடுக்க உள்ளேன்.

இந்தியா கூட்டணியினர் சீட்டு கட்டு போல சரியத்தொடங்கி உள்ளனர். ராமநவமியன்று ராமர் கோயில் பயனற்றது என்று சமாஜ்வாடி மூத்த தலைவர் ஒருவர் கூறியிருந்தார். அதே நேரத்தில் ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகின்றது. அவர்களுக்கு குடும்பம் மற்றும் அதிகாரம் மட்டுமே முக்கியம். சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்துக்கு அனுப்பிவிட்டு கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் டியூசன் சென்று கற்றுக்கொள்ளுங்கள்”என்றார்.

இதேபோல் படேபூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடமாட்டார் என்று நினைத்திருந்தேன். அது உண்மையாகிவிட்டது. அடுத்த செய்தி என்னவென்றால் தனது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி மிஷன் 50 தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டிலும் எப்படியாவது 50 தொகுதிகளையாவது வெற்றி பெற வேண்டும் என்பதே அதன் இலக்காகும்” என்றார். தொடர்ந்து ஹமிர்பூரில் பேசிய பிரதமர் மோடி, சமாஜ்வாடியும், காங்கிரசும் உங்களது சொத்தின் ஒரு பகுதியை அவர்களது ஜிகாதி வாக்கு வங்கிக்கு பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார்கள்” என்றார்.

The post காங்கிரசும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: