வடமாநிலத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை: டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமா?

சென்னை: வடமாநிலத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெற உள்ள தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடலாமா? என்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார்.

அங்கு அவர் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தேர்தல் வெற்றி நிலவரம் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் வடமாநிலங்களில் நடைபெறும் மக்களவை தேர்தல் நிலவரம், மீதமுள்ள மூன்று கட்ட மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு ‘சீட்’ கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் டெல்லியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாமா? என்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் கருத்துக்களை கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. அதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கலைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. அது மட்டுமல்லாமல் சென்னை அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

The post வடமாநிலத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை: டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமா? appeared first on Dinakaran.

Related Stories: