காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை; ரூ.16 லட்சம் கடன் இருக்கு..! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்

காந்திநகர்: காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், தனக்கு ரூ.15.77 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதையடுத்து பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, காந்திநகர் ெதாகுதில் மீண்டும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் ெசய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி ​அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், சமூக சேவகர் என்றும் கூறியுள்ளார்.

அவரது வருமான ஆதாரங்களில் எம்பி பதவிக்கான சம்பளம், வீடு – நிலம் தொடர்பான வாடகை, பங்கு ஈவுத்தொகை வருமானம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். இதனுடன், தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் பிரமாண பத்திரத்தில், ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. ரூ. 15.77 லட்சம் கடன் உள்ளது. ரொக்கமாக ரூ.24,164 மட்டுமே உள்ளது. ரூ. 72 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் உள்ளன.

2022-23ம் ஆண்டின் வருமானம் ரூ. 75.09 லட்சம். மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம். மனைவியின் பெயரில் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.22.46 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.9 கோடி. மனைவியின் பெயரில் ரூ.26.32 லட்சம் கடன் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்ட தொகுதியாகும். இத்தொகுதியில் 6 முறை அத்வானி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 தேர்தலில் அத்வானியின் சாதனையை (4.83 லட்சம் வாக்குகள்) அமித் ஷா (5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள்) முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ‘காந்திநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எல்.கே. அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதி இது. அதோடு மோடி வாக்காளராக உள்ள தொகுதி இது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. காந்திநகர் தொகுதியின் எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் 30 ஆண்டுகள் இருந்துள்ளேன். காந்திநகர் தொகுதி மக்கள் எனக்கு அளப்பரிய அன்பை வழங்கி இருக்கிறார்கள். இங்கு பூத் அளவிலான பணியாளராக நான் இருந்திருக்கிறேன். தற்போது இந்த தொகுதியின் வேட்பாளர். காந்திநகர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்’ என்றார்.

The post காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை; ரூ.16 லட்சம் கடன் இருக்கு..! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: