நாகப்பட்டினம் ஊரக பகுதிகளில் ஆர்வத்துடன் வாக்களித்த கிராம மக்கள்

*நகர் பகுதியில் மந்தமான பதிவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர பகுதிகளை விட ஊரக பகுதிகளில் ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நேற்று முன்தினம் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. இவை அனைத்தும் இரவோடு, இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தது. இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு எல்லாம் வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில வாக்குப்பதிவு மையங்கள் தவிர அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் எவ்வித தடங்களும் இல்லாமல் வாக்குப்பதிவு தொடங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் நகர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மதியம் 1 மணி வரை மந்தமாகவே இருந்தது. ஆனால் ஊரக பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்கு அளித்தனர். 1 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 9 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 11 மணி நிலவரப்படி 22.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 43.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கோடை வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்காளர்கள் 1 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளுக்க வாக்களிப்பதற்கு குறைவாகவே வந்தனர். வெயிலின் தாக்கும் மாலை 5 மணிக்கு குறைந்த பின்னர் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களை நோக்கி வந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒடிசா மாநில சிறப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 239 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 93 ஆயிரத்து 747 ஆண் வாக்காளர்களும், 97,492 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 227 பூத் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி வாக்கு சாவடிகளில் பொது தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் சங்கர், ஆர்டிஓ திருமால், தாசில்தார் திலகா, ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிலையில் வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிகளும், மறைஞாயநல்லூரில் அமைந்துள்ள ஆனந்தராசு உதவி நடுநிலைப் பள்ளியிலும் வாக்குப்பதிவு தொடங்கும் போது இயந்திரம் பழுதானது. பின்பு அதிகாரிகள் வந்து வாக்கு இயந்திரத்தை சரி செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு காலதாமதமாக நடைபெற்றது.

வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து இயந்திரம் சரி செய்யப்பட்ட பின்பு வாக்களித்து சென்றனர். இதே போல செட்டிபுலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்து அரை மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு பின்பு சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

20வது முறையாக வாக்களித்த 90 வயது மூதாட்டி

நாகப்பட்டினம் அருகே வடகுடியில் 90 வயது நிறைந்த மூதாட்டி 20 முறை ஜனநாயக கடமையாற்றியதாக கூறினார்.நாகப்பட்டினம் அருகே வடகுடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் தனம்(90). இவரது கணவர் தங்கவேல். தனம் நேற்று ஜனநாயக கடமையாற்ற வடகுடி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு தள்ளாத வயதில் ஊன்றுகோலை ஊன்றி கொண்டு தனியாக வந்தார்.

அங்கு ஜனநாயக கடமையாற்றி தனம் இதுவரை நான் 20 முறை ஓட்டுபோட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஓட்டுபோடும் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. முன்பு எல்லாம் ஓட்டுபோடும் இடத்திற்கு சென்று பெயர் சொன்னால் ஓட்டு போட முடிந்தது. இப்பொழுது ஓட்டு போடும் நபரின் போட்டோ ஒட்டிய சிலிப் மற்றும் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டியது உள்ளது. மிஷின் மூலம் ஓட்டுபோடுவது நாம் நினைத்தவருக்கு தான் ஓட்டுபோடுகிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்.

The post நாகப்பட்டினம் ஊரக பகுதிகளில் ஆர்வத்துடன் வாக்களித்த கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: