கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும்: மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் உறுதி

சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் நேற்று காலை வாக்களித்தார். அவருடன் தாயார் மல்லிகா மாறன், மனைவி பிரியா, மகள் திவ்யா ஆகியோரும் வாக்களித்தனர். பின்னர் தயாநிதிமாறன் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இந்த தேர்தல் ஒரு மிக முக்கியமான தேர்தல். இந்தியாவை காப்பாற்றிட, ஜனநாயகத்தை காப்பாற்றிட, மதசார்பின்மை அரசு அமைந்திட தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டிட, மதத்தின் பெயரால் இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பவர்களை தடுத்திட, தமிழ்…தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களை ஒழித்திட, நமது உரிமைகளை காத்திட முக்கியமான தேர்தல் இதுவாகும்.

எனவே, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிடுங்கள். உங்கள் ஓட்டு தமிழகத்தை காப்பாற்றும்; உங்கள் ஓட்டு இந்தியாவை காப்பாற்றும். வெறும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி, இந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் வந்துள்ளது. 10 ஆண்டில் அவர்கள் சொன்னது ஏதாவது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதா. ஆனால், 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கிய பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும். இந்த வெற்றி பயணம் தொடர்ந்திட வேண்டும். இந்த வெற்றி பயணம் இந்தியாவில் ஆட்சி அமைத்திட வேண்டும்.

கடந்த 2004ம் ஆண்டு எப்படி சிறந்த பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தோமோ, அதேபோல், இந்த முறை 2024ம் ஆண்டு மன்மோகன்சிங்கை போல சிறந்த மதசார்பற்ற பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்கள் கையில் உள்ளது. தைரியமாக வாக்களியுங்கள். வெல்வோம். சென்ற முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மத்தியசென்னை மட்டுமல்ல, தென்சென்னை மட்டுமல்ல, வடசென்னை மட்டுமல்ல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறும். எங்களை பொறுத்தவரை திமுக-அதிமுக கூட்டணிக்கும்தான் தேர்தல். பிற கூட்டணி கட்சிகள் நோட்டாவுடன் போட்டி போடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும்: மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: