சிறந்த மதசார்பற்ற பிரதமரை தேர்தெடுக்கும் உரிமை உங்களின் கையில்தான் உள்ளது: தயாநிதி மாறன் பேட்டி

சென்னை: இந்தியாவிற்கான சிறந்த மதசார்பற்ற பிரதமரை தேர்தெடுக்கும் உரிமை உங்கள் (மக்கள்) கையில் தான் உள்ளது என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறினார். சென்னை நந்தனத்தில் தனது குடும்பத்தினருடன் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்தியாவை காப்பாற்றிட, தமிழ்நாடு உரிமைகளை மீட்டிட, மதத்தின் பேரால் இந்தியாவை பிளவுப்படுத்த நினைப்பவர்களை தடுத்திட, தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களை ஒழித்திட நமது உரிமைகளை காத்திடும் முக்கியமான தேர்தல் இதுவாகும். எனவே, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிடுங்கள்.

உங்கள் ஓட்டு தமிழகத்தை காப்பாற்றும்; உங்கள் ஓட்டு இந்தியாவை காப்பாற்றும். வெறும் பொய்களை மட்டுமே கூறி இந்த 10 ஆண்டுகளில் தமிழகம் என்ன பயனடைந்துள்ளது என்பதை நீங்களை பாருங்கள். ஆனால், 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கிய பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும். இந்த வெற்றி பயணம் தொடர்ந்திட வேண்டும்; அதற்கு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். கடந்த 2004ம் ஆண்டு எப்படி சிறந்த பிரதமாரக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தோமோ, அதேபோல், இந்த முறை 2024ம் ஆண்டு சிறந்த மதசார்பற்ற பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்கள் கையில் உள்ளது. மக்கள் தெளிவாக இருக்கின்றனர். வெறும் பொய் பேசி சமூக வலையதளத்தில் மட்டும் தங்களை பூதாகரமாக காட்டி கொள்பவர்களுக்கு சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

மேலும், மழை, பெரு வெள்ளம் தமிழகத்தில் ஏற்பட்ட போது வராத பிரதமர், தற்போது தேர்தல் என்றதும் வெறுங்கையை வீசியபடி 8 முறை வந்தார். அவரை மீண்டும் வெறுங்கையுடன் அனுப்புவோம். கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக – அதிமுகவிற்கும் தான் போட்டி. பிற கட்சிகள் நோட்டாவுடன் போட்டி போடுகின்றன. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்வி அறிவை கொடுத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக கற்க முடியாக கல்வியை தற்போது கற்கிறோம். அதன்படி, கல்வி ஒன்று இருந்தால் நம்மை முன்னேற்றி கொள்ளலாம்; அதனால் தான் தமிழகம் முன்னேறியுள்ளது. நம்மை மீண்டும் மதநம்பிக்கையில் பூட்டி பின்னுக்கு தள்ள பார்க்கின்றனர். இதற்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிறந்த மதசார்பற்ற பிரதமரை தேர்தெடுக்கும் உரிமை உங்களின் கையில்தான் உள்ளது: தயாநிதி மாறன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: