வேலை கேட்டா கடலுக்கு அடியில் போய் நாடகமாடும் மோடி: ராகுல் காந்தி தாக்கு

திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த இரு தினங்களாக கேரளாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடைய சொந்தத் தொகுதியான வயநாடு மற்றும் கோழிக்கோட்டில் அவர் பிரசாரம் செய்தார். நேற்று மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவர் ரோடு ஷோ நடத்தினார். அப்போது பிரதமர் மோடியை அவர் கடுமையாக தாக்கியும், கிண்டலடித்தும் பேசினார்.

திருவம்பாடி பகுதியில் அவர் பேசியது:
பிரதமர் மோடி ஊழல் செய்பவர்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு அளித்து வருகிறார். நாட்டு மக்களின் சிரமங்களை அவர் கண்டு கொள்வதில்லை. ஒரு சாதாரண திருடன் நாட்டில் செய்யும் திருட்டுத்தனத்தை மோடி சர்வதேச அளவில் செய்கிறார். நம் நாட்டில் நடந்த மிகப்பெரிய ஊழலை அவர் மறைக்க முயற்சிக்கிறார். கொள்ளையடிப்பது என மலையாளத்தில் நீங்கள் கூறுவதைத் தான் தேர்தல் பத்திரம் என மோடி சொல்கிறார். தேர்தல் பத்திர விவகாரத்தில் விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தி அவர் பணத்தை வசூலிக்கிறார். பத்திரிகைகள் தேர்தல் பத்திரம் குறித்து எதுவும் கூறுவதில்லை. அவர்கள் வாய் திறந்தால் சிபிஐயும், அமலாக்கத் துறையும் பாய்ந்து வரும் என்று நன்றாகத் தெரியும்.

இந்தியாவில் மும்பை ஒரு மிக முக்கியமான விமான நிலையம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த விமான நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக திடீரென சிபிஐ விசாரணை வந்தது. விசாரணைக்குப் பின் அவரை சிபிஐ மிரட்டவும் செய்தது. இதன் பின்னர் ஒரு மாதத்திற்குள் அந்த விமான நிலையம் அதானியின் கைக்கு சென்று விட்டது. இப்படித்தான் மும்பை விமான நிலையத்தை அதானி கையகப்படுத்தியது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து முயற்சி செய்து வருகின்றன.

பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், விவசாயிகளின் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதைப்பற்றி மோடி வாய் திறக்க மறுக்கிறார். கடலுக்கு அடியில் போய் நாடகம் போடுகிறார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவேன். நிலவுக்கு மனிதனை அனுப்புவேன் என்றெல்லாம் கூறுவார். கடைசி வரை விலையேற்றம், வேலையில்லா திண்டாட்டம் குறித்து அவர் பேசப்போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post வேலை கேட்டா கடலுக்கு அடியில் போய் நாடகமாடும் மோடி: ராகுல் காந்தி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: