சுனில் நரைன் அதிரடி சதம் கொல்கத்தா 223 ரன் குவிப்பு

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடி சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஃபில் சால்ட், சுனில் நரைன் இணைந்து நைட் ரைடர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். சால்ட் 10 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நரைன் – ரகுவன்ஷி ஜோடி அதிரடியாக விளையாடி கேகேஆர் ஸ்கோரை உயர்த்தியது.

சுனில் 29 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். ரகுவன்ஷி 30 ரன் (18 பந்து, 5 பவுண்டரி) விளாசி குல்தீப் சென் பந்துவீச்சில் அஷ்வின் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன், ஆந்த்ரே ரஸ்ஸல் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியை தொடர்ந்த நரைன் சதம் விளாசி அசத்தினார். நரைன் 109 ரன் (56 பந்து, 13 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி டிரென்ட் போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார். வெங்கடேஷ் 8 ரன் எடுத்து அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடி காட்ட, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. ரிங்கு சிங் 20 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ரமன்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் ஆவேஷ் கான், குல்தீப் சென் தலா 2, போல்ட், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சாஹல் 4 ஓவரில் 54 ரன், அஷ்வின் 4 ஓவரில் 49 ரன் வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.

The post சுனில் நரைன் அதிரடி சதம் கொல்கத்தா 223 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: