22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடந்த 2022 டிசம்பர் 3ம் தேதி காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்துக்கு இடமான பைகளுடன் நின்றிருந்த நபரிடம் சோதனை அவர் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பட்டின வெங்கட கிருஷ்ணா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து அவர் மீது போதை பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சி, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் பட்டின வெங்கட கிருஷ்ணாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

The post 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: