குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட் தடை விதித்ததால் கணவருக்காக ஓட்டு கேட்கும் 2 மனைவிகள்: குஜராத் தேர்தல் களத்தில் சுவாரஸ்யம்

பரூச்: குஜராத்தில் குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட் தடை விதித்ததால் வேட்பாளரான கணவருக்காக அவரது 2 மனைவிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் பரூச் மக்களவைத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் சைதர் வாசவா என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இரு கட்சிகளும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிப்பதால், ஆம்ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இரு தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை.

பாஜக சார்பில் 6 முறை பாஜக எம்பியாக இருந்த மன்சுக் வாசவா என்பவர் போட்டியிடுகிறார். பாரதீய ஆதிவாசி கட்சி சார்பில் சோட்டு வாசவாவின் மகன் திலீப் வாசவாவும் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆம்ஆத்மி வேட்பாளரான சைதர் வாசவா மீது வனத்துறை அதிகாரிகளை தாக்கிய குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், பரூச் மக்களவை தொகுதிக்கு உட்பட சில பகுதிகளில் நுழையக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் பரூச் ெதாகுதியின் நர்மதா உள்ளிட்ட சில பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சைதர் வாசவாவின் இரண்டு மனைவிகளான சகுந்தலாவும், வர்ஷாவும் பிரச்னைக்குரிய பகுதிகளில் தனது கணவருக்காக வீடுவீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். சைதர் வாசவாவுக்கும், சகுந்தலாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பும், வர்ஷாவுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பும் திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்கின்றனர். குஜராத் பழங்குடியின மக்களிடையே பலதார மணம் என்பது நடைமுறையில் உள்ளது. மேலும் பழங்குடியினருக்கு இந்து திருமணச் சட்டத்தின் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட் தடை விதித்ததால் கணவருக்காக ஓட்டு கேட்கும் 2 மனைவிகள்: குஜராத் தேர்தல் களத்தில் சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Related Stories: