அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய பிஜேபி அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, திறந்தவெளி வாகனத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோர் மக்களிடையே நம்மை விட்டுச்சென்ற தலைவர்கள். 3 தலைவர்களுக்கு மக்கள்தான் வாரிசு. காஞ்சிபுரம் என்றாலே பேரறிஞர் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார்.

அந்த வகையில் அண்ணாவின் கொள்கைகளை கொண்டு ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தினோம். அவரது பொன்மொழிகளை நாம் கடைபிடிக்கிறோம். அதனால் தான் அவரது பெயரும், நமது கட்சி கொடியில் அண்ணாவின் படமும் உள்ளது. அதிமுக நிர்வாக திறமையை, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள்பாலிக்கும் அத்திவரதர் நிகழ்ச்சி மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் நெசவாளர்கள் பற்றி எந்த திட்டமும் இல்லை. காஞ்சிபுரத்தின் நெசவுத்தொழில், கைத்தறி, விசைத்தறி நலிந்துவிட்டது, அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிவிட்டது. ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,211 ஏரிகளை ரூ.1,740 கோடி செலவில் குடிமராமரித்துப்பணி செய்தோம். இதனால் விவசாயிகள், விவசாய தோழர்கள் நமக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் விலைகள் மற்றும் விலைவாசி ஏறாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்திவிட்டது. டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டதால் அனைத்து பொருட்களின் விலையும், போக்குவரத்து செலவும் உயர்ந்துவிட்டது. இது எல்லாம் சாதாரண மக்களை தான் பாதிக்கிறது. பலமுறை டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கிறது. 30 டன் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஒன்றிய அரசு தொடர்ந்து விலையை உயர்த்திக்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒன்றிய அரசு ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கிறது. இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கையேட்டில் தன் கருத்தை எழுதினார்.

* லேட்டா வந்தா எப்படி? அழைத்து வரப்பட்ட பெண்கள் புலம்பல்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது பேச்சை கேட்காமல் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். மேலும், கூட்டத்திற்காக வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்படும் பெண்கள், முதியவர்கள், வயதானவர்களை கூட்டமாக வந்து நில்லுங்கள் என்று கூறியபோது, அட போப்பா வெயில் தாங்க முடியல…. 10 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு இவ்வளவு லேட்டா வந்தால் என்ன செய்வது என்று புலம்பினார்கள்.

* பயணிகள் கடும் அவதி
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள வருகிறார் என்று கூறி காலை 10 மணியில் இருந்து தேரடி பகுதிக்கு அதிமுகவினர் வரத்தொடங்கினர். இதனால் அதிமுக வேன்கள் மட்டும் உள்ளே வர அனுமதிக்கப்பட்டது. அரசு பேருந்துகள், தனியார் கார் உள்ளிட்ட வாகனங்களை போலீசார், முத்தியால்பேட்டையிலேயே மடக்கி, வையாவூர் வழியாக பேருந்து நிலையம் அனுப்பி வைத்தனர். அதேபோல செவிலி மேடு பகுதியிலும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நேற்று திங்கட்கிழமை என்பதால் மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது, திங்கட்கிழமை பார்த்து தான் கட்சிக்காரர்கள் கூட்டம் வைப்பார்களா என்று பயணிகள் புலம்பினார்கள்.

* எதிர்க்கட்சியாக இருந்தால் நமக்கென்ன… நிழல் தான் முக்கியம்…
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 10 மணிக்கு எடப்பாடி வருவதாக இருந்த நிலையில் மணிக்கு 11.27க்கு வந்தார். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் மற்றும் பெண்கள் அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைந்து குடிநீர் தாகத்தால் வாட்டர் கேனோடு எடுத்து குடித்தனர். அப்போது, வெயில் தாக்கத்தால் கஷ்டப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த திமுக கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை சென்று ஓய்வெடுத்தனர். அதிமுக தலைவர்களின் புகைப்படத்தை சட்டையில் குத்திக்கொண்டு திமுக பணிமனையில் தஞ்சமடைந்தனர். எதிர்க்கட்சியாக இருந்தால் நமக்கு என்ன நிழல் தானே முக்கியம் என்று அவர்கள் இருந்தனர்.

The post அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: