ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவிப்பு : சொந்த சாதனையை முறியடித்தது சன்ரைசர்ஸ்

பெங்களூரு: ஆர்சிபி அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட், ஹெய்ன்ரிச் கிளாசன், அப்துல் சமத் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்து மீண்டும் வரலாற்று சாதனை படைத்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர்.

எடுத்த எடுப்பிலேயே அதிரடியில் இறங்கிய இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, சன்ரைசர்ஸ் ஸ்கோர் எக்குத்தப்பாக எகிறியது. குறிப்பாக, ஹெட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 108 ரன் சேர்த்து அசத்தியது. ஹெட் 20 பந்தில் அரை சதம் அடித்தார். அபிஷேக் 34 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அவுட்டானார். அடுத்து ஹெட் உடன் இணைந்த கிளாசனும் தன் பங்குக்கு சிக்சர் மழை பொழிய, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல, ஆர்சிபி பவுலர்கள் செய்வதறியாது ஸ்தம்பித்தனர்.

ஹெட் 102 ரன் (41 பந்து, 9 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி விடை பெற்றார். அதன் பிறகும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் டாப் கியரிலேயே பறக்க, ஸ்கோர் 200 ரன்னை கடந்தது. கிளாசன் – மார்க்ரம் இணை 3வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தது. 23 பந்தில் அரை சதம் அடித்த கிளாசன் 67 ரன் (31 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெர்குசன் பந்துவீச்சில் வைஷாக் வசம் பிடிபட்டார். அப்பாடா என ஆர்சிபி நிம்மதி பெருமூச்சு விட்டாலும், அது சில பந்துகளுக்கு கூட நீடிக்கவில்லை.

அடுத்து மார்க்ரம் – அப்துல் சமத் இணைந்து அதிரடியைத் தொடர, பெங்களூரு பந்துவீச்சு சின்னாபின்னமானது. இந்த ஜோடி கடைசி 3 ஓவரில் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, சன்ரைசர்ஸ் 20 ஓவரில்3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணியாக ஏற்கனவே முத்திரை பதித்திருந்த சன்ரைசர்ஸ், தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.

முன்னதாக, மார்ச் 27ம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்திருந்தது. மார்க்ரம் 32 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் சமத் 37 ரன்னுடன் (10 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் 22 இமாலய சிக்சர்களை தூக்கியதும் புதிய சாதனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது.

* சன்ரைசர்ஸ் அபார வெற்றி

விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து துரத்தலை தொடங்கினர். சவாலான இலக்கை எட்ட… ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க வேண்டியது கட்டாயம் என்பதால் இருவரும் அதிரடியில் இறங்கினர். இதனால் ஆர்சிபி ஸ்கோரும் இறக்கை கட்டிப் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவரில் 80 ரன் சேர்த்து மிரட்டியது. கோஹ்லி 42 ரன் (20 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, ஹெட்டுக்கு பதிலாக ‘இம்பாக்ட்’ வீரராக உள்ளே வந்த மார்கண்டே சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து டு பிளெஸ்ஸியுடன் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தார். மூச்சு விடாமல் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்…

அதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும் என்ற நெருக்கடியுடன் மட்டையும் பந்தும் முட்டி மோத, களத்தில் அனல் பறந்தது. டு பிளெஸ்ஸி 23 பந்தில் அரை சதம் அடிக்க, ஆர்சிபி 7.5 ஓவரில் 100 ரன்னை எட்டியது. அடுத்த பந்தில் வில் ஜாக்ஸ் ரன் அவுட்டாக, அதே உற்சாகத்துடன் சன்ரைசர்ஸ் தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியது. ரஜத் பத்திதார் 9 ரன் எடுத்து மார்கண்டே சுழலில் நிதிஷ் குமார் வசம் பிடிபட, ஆர்சிபி 115/3 என பின்னடைவை சந்தித்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே, டு பிளெஸ்ஸி 62 ரன் (28 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க… ஆட்டம் சன்ரைசர்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சவுரவ் சவுகான் சந்தித்த முதல் பந்திலேயே முட்டை போட்டு பெவிலியன் திரும்பினார். தினேஷ் கார்த்திக் – மகிபால் லோம்ரர் இணைந்து ஏதாவது மேஜிக் நிகழ்த்துவார்களா? என ஆர்சிபி ரசிகர்கள் ஆதங்கத்துடன் எதிர்பார்த்தனர்.

அதற்கேப் திணேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 85 ரன் (35 பந்து, 7 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து 19வது ஓவரில் அவுட்டானார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து, 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டு பிளெசிஸ் 62 ரன், கோஹ்லி 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அனுஜ் ராவத் 25 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் கம்மின்ஸ் 3,மார்கண்டே 2, நடராஜன் 1 விக்கெட் வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் 6 போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்தது.

The post ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவிப்பு : சொந்த சாதனையை முறியடித்தது சன்ரைசர்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: