செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாடு மீட்பு

 

செங்கல்பட்டு, ஏப். 15: செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (43). இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் செய்வதுடன் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சுகுமார் நேற்று காலை 3 பசுமாடுகளை கழனிக்கு ஓட்டி சென்று மேய்ச்சலுக்காக கட்டிவிட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஒரு பசுமாடு மட்டும் காணவில்லை. பசுமாடு அவிழ்த்து கொண்டு சென்றிருக்கலாம், என சந்தேகம் அடைந்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக பம்ப்செட் குழியில் இருந்து பசுமாடு அலறும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தபோது குழியில் பசுமாடு விழுந்து கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் கயிறு மூலமாக குழியில் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். கிணறு, குழிகள், மின்கம்ப ஸ்டே கம்பிகள் இல்லாத சமவெளிப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கட்ட வேண்டும் என்று தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.

The post செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாடு மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: