அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை தங்கத்தேரில் சுவாமி 3ம் பிரகாரத்தில் பவனி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஏப்.15: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சம்மந்த விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தங்கத்தேரில் சுவாமி பவனி வந்து அருள்பாலித்தார்.

சித்திரை மாத முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மேலும், அண்ணாமலையார் கோயில் வழக்கப்படி, நேற்று காலை பால் பெருக்கு நிகழ்ச்சியும், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

கோயில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டுக்கான விழா விபரங்களை தெரிவித்தனர். அதில், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்கத்தேர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வந்தது. அலங்கார ரூபத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்தரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் அலைமோதியது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில், தீபமலையின் மேற்கு திசையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில், நேற்று காலை 7 மணி அளவில் கருவறையில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை தரிசிக்க பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், மேகம் சூழ்ந்த நிலை காரணமாக சூரியஒளி படும் நிகழ்வு நடைபெறவில்லை.

The post அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை தங்கத்தேரில் சுவாமி 3ம் பிரகாரத்தில் பவனி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: