‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி

திருச்சி, ஏப்.15: தீயணைப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, திருச்சி மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் மலர் வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒன்றிய அரசு ஆண்டு தோறும் ஏப்.14ம் தேதி இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது. அன்றைய தினம் தீவிபத்து மற்றும் மீட்பு பணிகளில் தைரியமாக செயல்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘தீ பாதுகாப்பை உறுதிசெய்து, தேசத்தை கட்டியெழுப்ப பங்களிக்கவும்’, ‘நாட்டின் கட்டமைப்பை பேணி காப்பதற்கு தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்வோம்’ என்ற தலைப்பின் கீழ் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

இதை முன்னிட்டு திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினமான நேற்று இறந்த தீயைணப்பு துறை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தீணைப்பு துறையின் மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் தலைமை வகித்தார். தலைமை மாவட்ட அலுவலர்கள் லியோ ஜோசப், சத்தியவர்தன், முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்புத்துறை துவங்கப்பட்ட பின் இதுநாள் வரை உயிரிழந்த 33 தீயணைப்பு வீரர்களின் போட்டோக்களுக்கு மலவர்வளையம் வைத்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: