தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், போலீசார் நாளைக்குள் தபால் வாக்குகளை செலுத்த வேண்டும்

திருவாரூர், ஏப். 15: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் போலீசார் நாளைக்குள் தங்களது தபால் வாக்குகளை செலுத்துமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மற்றும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 10ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 35 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்களும், 65 இதர வாக்காளாகளும் என மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 478 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக ஆயிரத்து 183 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்காக திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியில் ஆயிரத்து 526 அலுவலர்களும், திருத்துறைபூண்டி தொகுதியில் ஆயிரத்து 340 அலுவலர்களும், நன்னிலம் தொகுதியில் ஆயிரத்து 541 அலுவலர்களும், மன்னார்குடி தொகுதியில் ஆயிரத்து 394 அலுவலர்களும் என மொத்தம் 4 தொகுதிகளிலும் சேர்த்து 5 ஆயிரத்து 801 அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வாக்குசாவடிகளுக்கான பாதுகாப்பு பணிக்காக தேர்தல் ஆணையத்தின் கணினி மென்பொருள் மூலம் ரேண்டம் முறையில் 698 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் போலீசார் தங்களுக்கான தபால் வாக்குகளை செலுத்துவதற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடி தொகுதிகளுக்கு அங்குள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும், நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதிகளுக்கு அங்குள்ள தாலுக்கா அலுவலகங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கான தபால் வாக்குகளை இன்றும் (15ம் தேதி), நாளையும் (16ம் தேதி) என 2 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாரு தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், போலீசார் நாளைக்குள் தபால் வாக்குகளை செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: