குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை லட்சார்ச்சனை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இங்கு தெற்கு முகமாக அமைந்திக்க வேண்டிய தட்சிணாமூர்த்தி, வடக்கு முகம் பார்த்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் வடகுருஸ்தலம் என தனி சிறப்பு பெற்றுள்ளது. தட்சிணாமூர்த்திகளில் வேதா, வீணா, யோக என பலவகைகள் உண்டு. இங்கு அவர் யோக தட்சிணாமூர்த்தியாக 10 அடியில் பிரமாண்டமாக ஸ்தாபனம் செய்யப் பட்டுள்ளார். கோயிலில் ஆதிசங்கரர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, கோயிலில் மே 1ம் தேதி (நாளை) மற்றும் வியாழன், வெள்ளி கிழமைகளில் லட்சார்ச்சனை நடக்கிறது. குருபெயர்ச்சி நிகழ்வான நாளை மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார்.

அதன்படி, குரு பெயர்ச்சியான நாளை பிற்பகல் 2.30 மணி முதல் கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம், 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் கலந்த கலசநீரில் விசேஷ அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை 9 மணி முதல் லட்சார்ச்சனையும் வெள்ளிக்கிழமை ருத்ராபிஷேகமும் நடக்கிறது. வியாபாரம், பண வரவு, திருமணம், மகப்பேறு, பதவி ஞானம் உள்ளிட்டவர்களுக்கு குரு பலன் முக்கியமாக கருதப்படுவதால் குரு பெயர்ச்சி அன்று தட்சிணாமூர்த்தியை ஏராளமானோர் வழிபடுவது வழக்கம். திருவொற்றியூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை லட்சார்ச்சனை appeared first on Dinakaran.

Related Stories: