முயல் வேட்டையாடிய இருவருக்கு ₹10,000 அபராதம்

கெங்கவல்லி, ஏப்.15: ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இணைப்பு பகுதியில், 3 மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து வேட்டை தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கெங்கவல்லி வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில், வனவர் தனபால், வனக்காப்பாளர் பச்சமுத்து, ஆனந்தகுமார் ஆகியோர் வீரகனூர் பேரூராட்சி ராயர்ப்பாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் முயல் பிடித்து கொண்டிருந்த 2 நபர்கள் வலை, டார்ச் லைட்டுடன் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 முயல்கள் உயிருடன் மீட்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சின்னத்தம்பி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பூசாரி மகன் அஜய் என்பது தெரியவந்தது. இவர்கள் சில ஆண்டுகளாக முயல் வேட்டையில் ஈடுபட்டு, வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டலுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும், வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ₹5000 வீதம் இருவருக்கும் ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த 2 முயல்களை கெங்கவல்லி காப்புப்காட்டில் வனத்துறையினர் விடுவித்தனர்.

The post முயல் வேட்டையாடிய இருவருக்கு ₹10,000 அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: