செங்கல்பட்டில் சினிமா டிக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு

 

செங்கல்பட்டு, ஏப். 15: செங்கல்பட்டில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட்களில் ‘‘உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை’’ என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சடித்து படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக தேர்தலில் பொதுமக்களை 100 சதவீதம் வாக்களிக்க வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உறுதிமொழி ஏற்பு, மனிதச்சங்கிலி, ரங்கோலி, கையெழுத்து இயக்கம், குடிநீர் கேன்கள், காஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டியும், பேரணி, தெருக்கூத்து உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள திரையரங்கம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சினிமா டிக்கெட்டின் பின்பக்கத்தில், ‘மைடியர் மக்களே வாக்களிப்பீர்’, ‘உங்கள் ஓட்டு உங்கள் உரிமை’ என்ற வாசகங்கள் மூலமாக 100 சதவீதம் வாக்குப்பதிவு வலிறுத்தும் வகையில் அச்சடித்து வினியோகம் செய்யப்பட்டது. அதனை திரையரங்கத்தில் படம் பார்க்க வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் படித்தனர். அப்போது, நாங்கள் தவறாமல் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றுவோம், என்று உறுதியளித்தனர். தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக திரையரங்கு நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post செங்கல்பட்டில் சினிமா டிக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: