கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30க்கு தொடங்கும் 28வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ச்சியாக 3 வெற்றிகளை வசப்படுத்தி உற்சாகத்தில் சிறகடித்த கொல்கத்தா அணிக்கு, சிஎஸ்கே வடிவில் முதல் தோல்வி கிடைத்தது. சென்னையில் நடந்த அந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா படுதோல்வி அடைந்தது. அதில் இருந்து மீண்டு, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி இன்று முனைப்புக் காட்டும்.

பிலிப்ஸ், நரைன், ரகுவன்ஷி, ரஸ்ஸல், ரிங்கு, வெங்கடேஷ் என தேர்ந்த பேட்டிங் வரிசையும்… ஸ்டார்க், ரஸ்ஸல், வருண், வைபவ் என சிறப்பான பவுலிங் வரிசையும் கொல்கத்தா அணியின் பலம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் சாதகம். அதே சமயம், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு நேற்று முன்தினம் டெல்லியிடம் வீழ்ந்தது. ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய லக்னோ அணி, அடுத்து பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியது. டி காக், ராகுல், படிக்கல், ஸ்டாய்னிஸ், பூரன், பதோனி, க்ருணால் என அதிரடிக்கு பஞ்சமில்லை. சூப்பர் ஜயன்ட்சின் பந்துவீச்சும் சூப்பர் தான். இரு அணிகளுமே 4வது வெற்றிக்காக மல்லுக்கட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் மோதிய 3 ஆட்டங்களிலும் லக்னோவே வென்றுள்ளது.
* அதிகபட்சமாக லக்னோ 210, கொல்கத்தா 208 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக லக்னோ 176, கொல்கத்தா 101 ரன் எடுத்துள்ளன.

The post கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: